பக்கம்:கரிகால் வளவன்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

காமல் என்னிடம் ஒப்பிக்கமாட்டாயா?” என்று கதறினாள். “தெய்வமே! போக வேண்டாம் என்று தடைசெய்த உன் குறிப்பைப் புறக்கணித்தேனே! அதற்குரிய தண்டனையாக இதுவரைக்கும் நான் பட்டது போதாதா? என் மங்கல வாழ்வை இழக்கும்படி செய்துவிடாதே” என்று மனமுருகிப் பிரார்த்தித்தாள். சில ஊர்களைக் கடந்து சென்றாள். ஆட்டனத்தியை அவள் காணவில்லை.

அவளுக்குக் கால் நோவெடுக்கவில்லை; கண் ஒளி மங்கவில்லை. அவ்வளவு தூரம் அவள் மனம் துணிவு பெற்றது. “எப்படியேனும் என் கணவரைக் கண்டுபிடித்துத்தான் மீள்வேன். காவிரிக்கு என் கணவனையும் மங்கல வாழ்வையும் பலி கொடுத்துவிட்டுத் திரும்ப மாட்டேன். கணவனை இழந்து நெருப்பைத் தழுவிய மங்கையர் வாழ்ந்த குலம் எங்கள் குலம், நான் நீரைத் தழுவிப் புண்ணிய உலகம் செல்வேன்” என்று அவள் புலம்பினாள். போய்க்கொண்டே இருந்தாள்.

ஒவ்வோர் ஊராகத் தாண்டிக் கடைசியில் காவிரிப்பூம்பட்டினத்துக்கே வந்துவிட்டாள். காவிரி கடலோடு கலக்கும் சங்கமுகத்தை அடைந்தாள். அவளுடன் வந்தவர்கள் அவளருகே நின்றார்கள். அதற்கு மேல் எங்கே போவது? எதிரே கடல் அலைகளை வீசிக் குமுறிக் கொண்டிருந்தது.

சங்கமுகத்தில் கடலை நோக்கி நின்று அவள் அழுதாள். “கடலரசனே! உன்னிடம் என் காதலர் புகல் புகுந்தாரோ? அவருடைய உடம்பைப் பவளம் போலவும் முத்துப் போலவும் உன் திருவயிற்றில் அடக்கிக்கொண்டாயோ?” என்று அழுதாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/100&oldid=1232519" இலிருந்து மீள்விக்கப்பட்டது