பக்கம்:கரிகால் வளவன்.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95


“சேர நாட்டிலிருந்து வந்த உங்கள் முகத்தைப் பார்த்த பிறகு, இனி நம் வாழ்வுக்குரிய இன்றுணை கிடைத்து விட்டது என்று இறுமாந்திருந்தேனே! மலையிலிருந்து வரும் காவிரி வெள்ளத்தைப் போல மலை நாட்டிலிருந்து அன்பு வெள்ளம் வந்தது என்று பூரித்தனே! எம்பெருமானே! காவிரி நீராட்டிலே உயிரைப் பறிகொடுக்கவா வந்தீர்கள்? இல்லை, இல்லை. நீங்கள் என்னைப் பிரிந்து போக மாட்டீர்கள். நீங்கள் உயிர் நீத்திருந்தால் என் உயிர் இந்த உடலிலிருந்து தானே போயிருக்கும். என் உயிர் போகாமல் நிற்பது ஒன்றே, நீங்கள் எங்கோ உயிருடன் இருப்பதற்கு அடையாளம். என் உள்ளத்துக்குள்ளே யிருந்து ஏதோ ஒன்று அப்படிச் சொல்கிறது. ஆகவே, வாருங்கள். என் உயிர்க்கு உயிராக நிற்கும் பெருமானே! வாருங்கள்” என்று கதறினாள்.

அவளுடைய துயரத்தைக் கண்டு உடன் இருந்தவர்கள் மனம் கலங்கினார்கள். அவர்களுக்கும் அழுகை வந்தது.

“காவிரியும் கடலும் கலக்கும் இந்த இடத்தில் நின்று முறையிடுகிறேன். காவிரி யென்னும் பெண்ணே! நீ மங்கலம் நிரம்பினவள்; போகின்ற இடங்களிலெல்லாம் மங்கலத்தை வளர்ப்பவள். நீ என் மங்கலத்தை மாற்றலாமா? என் தந்தையார் உன் கரையை அழகு செய்து தம் மகளைப் போலப் பாதுகாக்கிறாரே. அவர் மகளாகிய நான் உன் உடன் பிறந்தாள் போன்றவள் அல்லவா? சிறிதும் இரக்கமின்றி என் காதலரை நீ வவ்விக் கொள்ளலாமா? கடலரசனே ! உன்னிடம் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/101&oldid=1232520" இலிருந்து மீள்விக்கப்பட்டது