பக்கம்:கரிகால் வளவன்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

அயர்வினால் இளவரசன் தூங்கிவிட்டான். எவ்வளவு காலம் தூங்கினானோ, தெரியாது. ஏதோ ஆளரவம் கேட்டு விழித்துக் கொண்டான். வெளியிலே யாரோ பேசினார்கள். பேச்சுத் தெளிவாகக் காதில் விழவில்லை. “யார் அங்கே?” என்று கேட்டான். அவர்கள் விடை கூறவா வந்தார்கள்?

மாபாவிகள் அந்தச் சோழர் குலக்கொழுந்தை உயிரோடு கொளுத்திவிட வந்தார்கள். நள்ளிருளில் இந்தக் காரியத்தைச் செய்ய வந்திருந்தார்கள். அந்தக் கூரை வீட்டில் நெருப்பு வைத்துவிட்டுப் போய்விட்டார்கள்.

உள்ளே இருந்த சிறுவனுக்குப் புகை நாற்றமும் மூங்கில் வெடிக்கும் ஓசையும் தெரிந்தன. ஒரே வெளிச்சம் தோன்றியது. அண்ணாந்து பார்த்தான். கூரை தீப்பிடித்துக்கொண்டது தெரிந்தது. “ஆ!” என்று கூவினான். இனி எப்படி தப்புவது? கதவை இடித்தான்; தன் பலத்தை யெல்லாம் சேர்த்து இடித்தான்; அது வழி விடவில்லை. மேலே கூரை பற்றி எரிந்தது. நெருப்புக் கங்குகளும் எரிந்த மூங்கில்களும் கீழே விழுந்தன. எரியாத கூரைப் பகுதிக்கு அடியிலே போய் ஒன்றிக் கொண்டான். அந்தப் பகுதி எரிந்துவிட அதிக நேரம் செல்லாதே! கூரை முழுவதும் நெருப்புக் கோளமாகி அவன் தலைமேல் விழப்போகிறது; அப்புறம்?

ஓடி ஓடி ஒதுங்கினான். “அம்மா! அம்மா! மாமா! மாமா!” என்று கதறினான். தந்தையையோ பிறரையோ கூப்பிட்டுப் பழக்கம் இருந்தால் அல்லவா அவன் வாயில் வேறு வார்த்தை வரும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/28&oldid=1344670" இலிருந்து மீள்விக்கப்பட்டது