பக்கம்:கரிகால் வளவன்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முகவுரை

சோழர்களுடைய சரித்திரம் நீண்டது; விரிந்தது; சுவை நிரம்பியது. சரித்திர காலத்துக்கு முன் இருந்த சோழர்களின் வரலாற்றைப் பழந்தமிழ் இலக்கியங்களின் துணை கொண்டு ஒருவாறு உருவாக்கலாம். அந்தப் பழஞ் சோழர்களுக்குள் இணையின்றி வாழ்ந்தவன் கரிகால் வளவன். அவனுடைய வரலாற்றைக் கதை போல விரித்து எழுதிய புத்தகம் இது.

ஆராய்ச்சி முறையில் இன்ன இன்ன பிகழ்ச்சிக்கு இன்ன இன்னது ஆதாரம் என்று சொல்லாமல், இலக்கிய ஆதாரங்களை யெல்லாம் தொகுத்து அவற்றிலுள்ள செய்திகளை ஒருவாறு கோவைப்படுத்திக் கற்பனையென்னும் பசையால் இணைத்து உருவாக்கியது இவ்வரலாறு. நிகழ்ச்சிகளினூடே உள்ள உணர்ச்சியை வெளிப்படுத்த வருணணைகளையும், உரையாடல்களையும் இடையிடையே அமைத்திருக்கிறேன். புத்தகத்தை படித்த பிறகு, ஒரு பேரரசனுடைய வரலாற்றை உணர்ச்சியோடு தெரிந்து கொண்டோம் என்ற திருப்தி நிலவவேண்டும் என்பதே என் கருத்து. அதோடு படித்துச் செல்லும் பொழுதே கதையை நாம் ஒட்டாமல் அது நம்மை ஓட்டவேண்டும் என்ற நினைவால் கதைக் குரிய கருவை விரித்துச் சொல்லியிருக்கிறேன்.

கரிகாலனுடைய வரலாற்றைத் தெரிந்து கொள்ளச் சிறந்த ஆதாரமாக இருப்பவை பொருநராற்றுப்படையும், பட்டினப்பாலையும் ஆகும். புறநானூற்றில் உள்ள பாடல்கள் சில கரிகாலனை நேர்முகமாகப் பாடுகின்றன. மற்றத் தொகை நூல்களில் அங்கங்கே உவமையாகவும் பிறவாறாகவும் கரிகாலனைப் பற்றிய செய்திகள் துண்டு துண்டாகக் கிடைக்கின்றன. சிலப்பதிகாரத்தில் சில செய்திகள் இருக்கின்றன. இவற்றை யெல்லாம் படித்துத் தொகுத்து இதை உருவாக்கி அமைத்தேன்.

காந்தமலை
கல்யாண நகர்,
சென்னை–28
கி. வா. ஜகந்நாதன்

25—11—66
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/5&oldid=1232311" இலிருந்து மீள்விக்கப்பட்டது