பக்கம்:கரிகால் வளவன்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

சோழ நாட்டிலிருந்து தொழிலாளிகளையும் அனுப்புவதாகத் தெரிவித்தான். அரசர்கள் யாவரும் அவனுடைய விருப்பத்துக்கு இணங்கிக் கரையெடுக்க முற்பட்டார்கள்.

அந்த மன்னர்களில் உருத்திரன் என்பவன் ஒருவன். அவன் முதலில் கரிகாலனது வேண்டுகோளைச் சட்டை செய்யவில்லை. நெற்றியில் கண் உடைய உருத்திரமூர்த்தியின் வழிவந்தவர்கள் தன் குலத்தவர் என்று பெருமை பேசிக்கொள்பவன் அவன். அதற்கு அறிகுறியாக நெற்றியில் கண்ணைப் போன்ற குறியை அணிந்துகொள்ளும் வழக்கம் அந்த மரபினருக்கு இருந்தது.

உருத்திரன் தன் வேண்டுகோளுக்கு விடை அளிக்காமல் இருப்பது கரிகாலனுக்குத் தெரிந்தது. அந்த அரசனை அடக்கி விடுவதென்பது மிகவும் சிறிய காரியம். இதற்காகப் படை எடுப்பதா? கரிகாலன் ஓர் ஓவியனை அழைத்தான். உருத்திரனைப்போல ஒரு படம் எழுதச் சொன்னான். அதில் நெற்றிக் கண்ணையும் அமைக்கச் செய்தான். கரிகாலனிடம் அந்தப் படம் சென்றது. எதற்காக இந்தப் படம் எழுதச் சொன்னான் அரசன் என்பது யாருக்கும் தெரியாது.

படத்தை இடக்கையில் எடுத்தான் திருமா வளவன், வலக்கையில் வேலை எடுத்தான். அந்தப் படத்தில் காட்டியுள்ள நெற்றிக் கண்ணை வேலால் குத்தினான். ஓவியக் கிழியில் நெற்றிக் கண் உள்ள இடம் பொத்தலாயிற்று. “இந்தா, இந்தப் படத்தை உருத்திரனுக்கு அனுப்பி வை; அவன் இதைப் பார்த்துப் புத்தியுள்ளவனாக இருந்தால் பிழைக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/59&oldid=1205695" இலிருந்து மீள்விக்கப்பட்டது