பக்கம்:கரிகால் வளவன்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

சிறிய ஊர் இருப்பதாகத் தெரிய வந்தது. ‘இந்தப் பூமி வீரம் செறிந்தது. இந்தக் கோழி நம்முடைய போக்கைத் தடுத்தது இறைவன் செயலே. இதனால் நம்முடைய ஊக்கம் குறையக்கூடாது. இந்த இடத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பல இடங்களைப் பார்த்து வரும் நமக்கு இந்த இடத்தின் சிறப்பைப் புலப்படுத்தவே திருவருள் இப்படிச் செய்தது போல் தோன்றுகிறது’ என்று அவன் சிந்தித்தான்.

அரசர்களுக்குக் கடற்கரை நகரம் மாத்திரம் சிறந்திருந்தால் போதாது. உள் நாட்டிலும் ஒரு நகரம் சிறப்பாக அமையவேண்டும். வியாபாரம் முதலியவற்றிற்குக் கடற்கரை நகரம் வசதியாக இருந்தாலும் கோட்டை கொத்தளங்களுடன் அமைய உள் நாட்டு நகரம் ஒன்றும் வேண்டும். இத்தகைய எண்ணம் கரிகாலனுக்கு முன்பே இருந்தது. ஆகவே, உள் நாட்டிலும் ஓர் இராசதானி நகரத்தை அமைக்க வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. எந்த நகரத்தைத் தேர்ந்தெடுப்பது? கரிகாலன் ஒரு முடிவுக்கும் வராமல் இருந்தான்.

நடுவழியில் கோழியால் யானை தாக்குண்டு யாவரும் செயலற்று நின்ற இப்போது, கரிகாலன் உள்நாட்டு நகரத்தைப்பற்றி உறுதியான முடிவுக்கு வந்துவிட்டான். ‘இறைவன் இந்த இடம் சிறந்தது என்று கோழியின் வாயிலாகக் குறிப்பிடுகிறான். இந்த நிலத்தின் பெருமையை நாம் கண் கூடாக உணர்ந்தோம். இதுகாறும் சில மக்கள் உறையும் இந்தச் சிற்றூர், இனிச் சோழ மன்னர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/63&oldid=1232491" இலிருந்து மீள்விக்கப்பட்டது