பக்கம்:கரிகால் வளவன்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

கரிகாலன் பகைவரை வென்றான்; காவிரிப்பூம் பட்டினத்தை அழகு படுத்தினான்; காவிரிக்குக் கரை கட்டினான்; உறையூரை நிறுவிப் பெருநகராக்கினான். சோழ நாட்டின் சிறப்பை உலகமெல்லாம் போற்றியது.

அவனுடைய தந்தை அழுந்தூர் வேளின் மகளை மணம் செய்து கொண்டான். அதுபோலவே அவனும் வேளாண் செல்வர் ஒருவருடைய மகளை மணம் புரிந்துகொள்ள எண்ணினான். சீகாழிக்கு அருகில் உள்ள நாங்கூரில் கல்வி கேள்வி அறிவு ஒழுக்கங்களால் சிறந்த வேளாண் செல்வர் ஒருவர் இருந்தார். அவருடைய திருமகளைக் கரிகாலன் மணந்தான். பராக்கிரமத்தாலும், பெருஞ் செயலாலும் கரிகாலன் தெய்வத்துக்குச் சமானமாய் உள்ளவன். அவனுக்கும் தமக்கும் நெடுந்தூரம் என்று ஒரு வகையில் எண்ணினர் மக்கள். ஆனாலும் அவ்வளவு தூரத்தில் இருப்பதற்குரிய அவன், கருணையினால் தெய்வம் எளியருக்கும் எளியனாய் வருவது போலத் தன் அன்பினால் குடிமக்களுக்குச் சமீபத்தில் உள்ளவனாக, அவர்களுடைய உள்ளக் கோயிலில் உறைபவனாக விளங்கினான். அவன் நாங்கூர் வேளின் மகளை மணந்து கொண்ட செயல் இந்த அன்பையும் அணிமையையும் பின்னும் அதிகமாக்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/65&oldid=1205102" இலிருந்து மீள்விக்கப்பட்டது