பக்கம்:கரிகால் வளவன்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



7. கிழக் கோலம்

ரிகால் வளவனுடைய ஆட்சியில் அறமும் பொருளும் இன்பமும் களிநடம் புரிந்தன. காவிரிக்குக் கரை கட்டிய பின் அந்த ஆற்றின் நீர் சோழ நாட்டுக்கு மிகுதியாகப் பயன்பட்டது. ‘சோறுடையது சோழ வளநாடு’ என்று மற்ற நாடுகளில் உள்ளவர்களெல்லாம் புகழத் தொடங்கினர்கள். ஒரு வேலி நிலத்தில் ஆயிரக் கலம் நெல் விளைந்தது. ஒரு பெண் யானை படுத்திருக்கும் இடத்தில் விளையும் நெல்லால் ஏழு களிறுகளைக் காப்பாற்றும்படியாகச் சோழ நாட்டின் நிலவளம் இருந்தது. பல காலமாக நெல் விளையாத இடங்களெல்லாம் இப்போது நெல் வயலாக மாறின. அந்தப் புதிய நிலங்களில் விளைந்த விளைவு மற்ற இடங்களைவிட அதிகமாக இருந்தது. காவிரி நீர் வண்டலோடு வந்து வயல்களிலே பாய்ந்ததால் எருவென்று தனியே போட வேண்டிய அவசியமே இல்லாமற் போயிற்று.

காவிரிப்பூம் பட்டினத்தில் புறநாட்டிலிருந்து வந்த மக்கள் சோழ நாட்டுப் பொருள்களை வாங்கித் தங்கள் நாடுகளுக்குக் கொண்டு சென்றனர். யவனர் பலர் காவிரிப்பூம் பட்டினத்துக்கு வந்து வியாபாரம் செய்தனர். தமிழ் நாட்டிலிருந்து மிளகு, ஏலம், சாதிக்காய், பட்டு, துகில், மயில் தோகை முதலிய பண்டங்களை வாங்கித் தங்கள் நாட்டுக்கு அனுப்பினார்கள். தங்கள் நாட்டிலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/66&oldid=1232493" இலிருந்து மீள்விக்கப்பட்டது