பக்கம்:கரிகால் வளவன்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

காதிற்கு எட்டியது. அதைக் கேட்டு அவன் சினம் கொள்ளவில்லை. அவர்கள் ஐயமுற்றது நியாயமே என்று எண்ணினான்.

கரிகாலன் சான்றோர்களுடைய அறிவுரைகளைக் கேட்டு அவர்களின் போக்குப்படியே முடிவு கட்டுகிறவன். தன்னுடைய அறிவுத் திறத்தால் ஏதேனும் தெரிவிப்பதற்குரியது வந்தால் அதைத் தெரிவிப்பான். அது தக்கதாக இருந்தால் சான்றோர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இல்லையானால் காரணம் கூறி அவன் கருத்தை மாற்றுவார்கள். எந்தக் காலத்திலும் கரிகாலன் தன் கருத்தையே முடிந்த முடிபாக நிலை நிறுத்துவதில்லை. இப்படித் தான் முடிவு செய்யவேண்டும் என்று குறிப்பாகக் கூடப் புலப்படுத்துவதில்லை. எப்படியாவது உண்மை வெல்ல வேண்டும், நியாயம் நிலை நிற்க வேண்டும் என்பது தான் அவனுடைய விருப்பம்.

இந்த இயல்பை வந்தவர்கள் கண்டார்களா? அவர்கள் தங்கள் வழக்கில் நியாயம் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்கள். நியாயத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் அநுபவம் இல்லாவிட்டால் தங்களுக்கு நன்மை உண்டாகாதே என்று அவர்கள் அஞ்சினார்கள். அதனால்தான் அவர்கள் கரிகாலனுடைய இளமையைக் கண்டு ஐயுற்றார்கள்.

அவர்களுடைய மன நிலையைக் கரிகாலன் உணரத் தக்க பேரறிவுடையவன். ஆகவே அவர்கள் மனம் திருப்தியடையும் வகையில் நியாயம் வழங்க வேண்டுமென்று எண்ணினான். அதுகாறும் நிகழாத ஒரு காரியத்தைச் செய்யலானான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/69&oldid=1205122" இலிருந்து மீள்விக்கப்பட்டது