பக்கம்:கரிகால் வளவன்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75


எங்கும் முழங்குகின்றன. வயல் இல்லாத மேட்டு, நிலங்களில் அடம்பங்கொடியும் பகன்றை என்ற கொடியும் படர்ந்திருக்கின்றன. புன்கமரமும் ஞாழல் மரமும் வளர்ந்திருக்கின்றன.

ஒரு பக்கம் முல்லை நிலம் பரந்திருக்கிறது. காடும் காட்டைச் சார்ந்த இடமும் முல்லை நிலமாகும். அங்கே ஒரு சார் முல்லைக்கொடி பூத்துப் படர்ந்திருக்கிறது. செங்காந்தள், சிவந்த மலரைப் பூத்து நிற்கிறது. தேற்றா மரமும் கொன்றை மரமும் மொட்டவிழ்ந்து மலர்கின்றன. நீலமணியைப் போன்ற மலர்கள் காயா மரத்தில் மலர்கின்றன.

கடற்கரைப் பக்கத்தில் நாரைகள் இறால்மீனைக் கொத்தித் தின்கின்றன. அங்கே வளர்ந்திருக்கும் புன்னை மரத்திலே அவை தங்குகின்றன. கரையிலே மோதி முழங்கும் அலை ஒசைக்குப் பயந்து அந்த நாரைகள் பனைமரத்திற்குப் போய் அதன் மடலில் இனிமையாகத் தங்குகின்றன. அங்கங்கே குலைகுலையாகத் தேங்காய்களும் வாழைக்காய்களும் அந்த அந்த மரங்களில் தொங்குகின்றன.

ஒரு நிலத்தில் வாழும் மக்கள் வேறு நிலத்துக்குச் சென்று தம் நிலத்தில் விளையும் பண்டங்களை விற்றுவிட்டு அந்த நிலத்தில் விளைகின்ற பொருள்களை வாங்கி வருகிறார்கள். மலைப்பாங்கரில் வாழும் மக்கள் தேனையும் கிழங்கையும் கடற்கரைப் பக்கத்தில் விற்றுவிட்டு அங்கே கிடைக்கும் மீன் நெய்யையும் நறவையும் வாங்குகிறார்கள். மருதநிலப் பரப்பில் வாழ்பவர்கள் கரும்பையும் அவலையும் விற்று மான் தசையையும் வேறு உணவுப்பண்டத்தையும் வாங்கிச் செல்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/81&oldid=1232504" இலிருந்து மீள்விக்கப்பட்டது