பக்கம்:கரிகால் வளவன்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76


குறமக்கள் குறிஞ்சி நிலத்திலே மலரும் குறிஞ்சிப் பூவை அணிந்து மகிழ்கிறார்கள். அது சலித்துவிட்டதானால் நெய்தல் பூவாலான கண்ணியைத் தலையிலே சூட்டிக்கொள்கிறார்கள். காட்டிலே வாழும் கோழிகள் அருகிலே உள்ள மருத நிலத்துக்கு வந்து அங்குள்ள நெற் கதிரைத் தின்னுகின்றன. வயலுக்கருகில் வீட்டிலே வளரும் கோழிகள் மலைப்பக்கத்திற் சென்று அங்கே விளையும் தினையைத் தின்னுகின்றன. மலையிலே வாழும் மந்திகள் கடற்கரைக்கருகில் உள்ள உப்பங்கழியில் மூழ்கிக் களிக்கின்றன. கழியிலே திரியும் நாரைகள் மலையிலே போய் இளைப்பாறுகின்றன. இப்படிக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நான்கு வகை நிலப்பரப்பிலும், அங்கங்கே வாழ்வதற்குரிய பறவைகளும் விலங்குகளும் மக்களும் மற்ற நிலங்களுக்கும் சென்று சலிப்புத் தீர இன்பம் நுகர்வதைக் காணலாம்.

எல்லாவற்றிற்கும் மேற்பட்ட சிறப்பைக் காவிரியாற்றினாற் பெறுவது சோழ நாடு. காவிரி எங்கே தோன்றினாலும் எவ்வெந்நாட்டின் வழியே வந்தாலும் அதன் முழுப் பயனையும் பெறுவது சோழ நாடுதான். சூரியன் வெம்மையாகத் தன் கதிர்களை வீசி எங்கும் பசு மரங்கள் வாடிப் போனாலும், மலைகளில் அருவி வறண்டாலும், மேகம் மழை பெய்ய மறந்தாலும், எங்கும் பஞ்சம் படர்ந்தாலும் என்றைக்கும் பொய்யாமல் நீர்வளம் பெருக்குவது காவிரியாறு.

காவிரியில் வெள்ளம் வருவதைப் பார்த்தால் எத்தனை அழகாக இருக்கிறது! மலைப் பகுதிகளி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/82&oldid=1232505" இலிருந்து மீள்விக்கப்பட்டது