பக்கம்:கரிகால் வளவன்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77


லிருந்து வருவதனால் மலைவிளை பொருள்களை ஆற்று நீர் அடித்து வருகிறது. நறைக் கொடியும் நரந்தப் புல்லும் அகிலும் சந்தனமும் அதில் மிதந்து வருகின்றன. அவற்றைக் காவிரி கரையிலே ஒதுக்கிச் செல்கிறது.

சோழ நாட்டிலுள்ள குளத்திலும் மடுவிலும் தன் நீரை நிரப்புகிறது. அங்கே மகளிர் நீரில் குடைந்து விளையாடுகிறார்கள். இந்தப் புது வெள்ளத்தால் எங்கும் நெற்பயிர் மிகச் சிறப்பாக விளைகிறது. விளைந்த பயிர் காய்த்து முதிர்ந்து வளைகிறது. நெற்கதிரை அரிவாளால் அறுத்துத் தொகுக்கிறார்கள். கதிர்களை மலைபோலக் குவிக்கிறார்கள். பின்பு கடா விட்டு நெல்லைக் குவியல் குவியலாகப் போடுகிறார்கள். பொன்னிறம் பெற்ற அவற்றைப் பார்த்தால் மேரு மலையின் நினைப்பு வருகிறது. பின்பு நெல்லைக் குதிர்களிலே கொண்டு போய்க் கொட்டுகிறார்கள். எல்லாக் குதிர்களும் நிரம்பி விடுகின்றன. ஒவ்வொரு வேலியிலும் ஆயிரம் கலம் நெல் விளைகிறது.

எல்லாம் காவிரி தரும் செல்வம். காவிரிதான் சோழ நாட்டையே காப்பாற்றுகிறது.

இவ்வாறு சோழ நாட்டின் வளத்தை முடத்தாமக் கண்ணியார் வருணித்துப் பொருநர் ஆற்றுப்படையைப் பாடி நிறைவேற்றினார் 248 அடிகளை உடைய பெரிய பாட்டு அது அதைக் கேட்ட கரிகால் வளவன் பெண்புலவரைப் பாராட்டிப் பரிசில் வழங்கினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/83&oldid=1232506" இலிருந்து மீள்விக்கப்பட்டது