பக்கம்:கரிகால் வளவன்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்படியே துளைந்து விளையாடினான். நெடு நேரம் நீருக்குள் மூழ்கியபடியே இருக்கும் பயிற்சியை அவன் செய்திருந்தான்.

ஆடி மாதம் பிறந்தது. காவிரியில் புது வெள்ளம் வந்தது. புது வெள்ளம் வந்தால் உழவர்களுக்கெல்லாம் ஒரே குதூகலம். அதைப் பறை கொட்டி வரவேற்றார்கள். நுங்கும் நுரையுமாகக் காவிரி வந்தது; புது மணப் பெண்ணைப் போல மலர்களையும் தளிரையும் சுமந்து வந்தது; தன் கணவன் வீட்டுக்கு விரைந்து செல்பவளைப் போலக் கடலை நோக்கி வேகமாக ஓடியது.

ஆட்டனத்தி காவிரி வெள்ளத்தைப் பார்க்க விரும்பினான். தன் காதலியையும் அழைத்தான். “அப்பாவையும் அழைத்துப் பார்க்கிறேன். வந்தால் எல்லாரும் ஒன்றாகப் போகலாம்” என்றாள் அவள்.

“அவருக்கு எத்தனையோ வேலை. இப்போது நம்முடன் எதற்காக வருகிறார்?” என்றான் ஆட்டனத்தி.

அவர்கள் இருவருமே புறப்படுவதாக இருந்தார்கள். ஆனால் புறப்படும்போது ஏதோ தடை நிகழ்ந்தது. “நாளைக்குப் போகலாம்” என்று நின்றுவிட்டார்கள். மறு நாளும் புறப்படுகையில் தடை உண்டாயிற்று. “தந்தையாரை அழைக்காமல் போவது தவறு என்று தோன்றுகிறது. அதற்கு ஏற்றபடி தடைகளும் உண்டாகின்றன. அவரையும் அழைத்துக்கொண்டு போவது தான் நல்லது” என்றாள் ஆதிமந்தி. அத்தி உடன்பட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/96&oldid=1232515" இலிருந்து மீள்விக்கப்பட்டது