பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

125

வரலாறு' (History of Tamil Language and Literature) என்னும் பெயரால், தமிழ்க் கல்வியாளரும் தமிழ் ஆய்வாளரும் வழங்குவது மரபு. பாரதியாரின் பாடல்களில் தமிழ் மொழி வரலாறு பற்றிய சில குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அவை:

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”.

“தேமதுரத் தமிழ் ஓசை"

"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா"-(பாப்பா பாட்டு-12)

தமிழ் மொழி வாழ்த்து:

"வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
        வாழிய வாழிய வே!
வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும்
          வண்மொழி வாழிய வே!
வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து
         வளர் மொழி வாழிய வே!

3-1-1.

மேலே தந்துள்ள பாடல்களில், தமிழ் இனிமை (மதுரம்) வாய்ந்தது; தமிழ்ச் சொல் உயர்ந்தது ; தமிழ் வானளாவிய உலக மனைத்தும் அளந்தது - அறிந்தது - என்னும் மூன்று செய்திகள் தரப்பட்டுள்ளன. தமிழ் இனிமையான மொழிதான். தமிழ் என்னும் சொல்லுக்குத் 'தமிழ் மொழி' என்னும் பொருள் இருப்பதன்றி, 'இனிமை' என்னும் பொருளும் உண்டு. இதனை,

"தமிழ் தழீஇய சாயலவர் (சீ. சிந்தாமணி-2026)