பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

மெனச் சூழ்ச்சி செய்தனர். அவருள் ஒருவன் தமிழறிந்த புலவனாம். அவள் நந்தியின் மாற்றாந்தாய் மகன் எனச் சிலர் கூறுகின்றனர்; நந்திவர்மனின் தந்தை தந்திவர்மனுக்கு வேசி யொருத்தியின்பாற் பிறந்தவன் அவன் என வேறு சிலர் மொழிகின்றனர். அவன் நந்தியின் மேல் ‘அறம்'வைத்துக் கலம்பகம் பாடினானாம். ‘அறம் வைத்துப் பாடுதல்’ என்றால், ஆளே அழிந்து போகும்படிப் பாடுதலாம். பொருந்தாத எழுத்துக்களும் சொற்களும் பொருட்களும் பெய்து எழுத்துக் குற்றம்-சொற்குற்றம் பொருட் குற்றம் அமையப் பாடினால் ஆளே அழிந்து போவது வழக்கமாம். அவ்வாறு பாடப்பட்டதே நந்திக் கலம்பகம் என்று சொல்லப்படுகிறது.

இனிக் கதைக்கு வருவோம்: நச்செழுத்தும் நச்சுப் பொருளும் அமையப் பாடப்பட்டுள்ளது நந்திக் கலம்பகம் என்பதை எப்படியோ அறிந்து கொண்ட நந்தியின் அமைச்சர்கள், அந்தக் கலம்பகத்தைக் கேட்கலாகாது என நந்திக்கு அறிவுறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் ஒருநாள் நந்தி அரியணையில் அமர்ந்திருந்தகாலை, கலம்பகம் பாடிய பங்காளிப் புலவன், வேறொருவனை விட்டு, அரியணையின் பின்னே சுவரில் இருந்த ஒரு துளையின் வழியாகக் கலம்பகத்திலிருந்து ஒரு சுவையான பாடலைப் பாடச் செய்தான். அதனைக் கேட்டு நந்தி மிகவும் சுவைத்தான். பின்னொரு நாள் இரவு நகர் உலாச் சென்ற நந்தி ஒரு வீட்டில் நந்திக் கலம்பகப் பாடல்கள் சில பாடப்படக்கேட்டு மகிழ்ந்தான். இவன் காதில் விழும்படி அங்கே திட்டமிட்டுப் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. நூலின் சுவையின்பத்தில் தன்னைப் பறிகொடுத்த நந்தி, உயிர் போயினும் நூல் முழுவதையும் கேட்டே தீரவேண்டும் என்ற உறுதியான முடிவுக்கு வந்தான். தம்பிப் புலவனை அழைத்து, பாடல்களைப் பாடி நூலை அரங்கேற்றச் சொன்னான். ஒன்றன் முன்