பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154


அவா யாரை விட்டது; எவ்வளவு சேர்ந்தாலும் போதவில்லை; ஆம்-போதவேயில்லை, என்ன செய்வது! அதனால்தான் திருமூலர், அவா அறுங்கள் என,

“ஆசை அறுமின் ஆசை அறுமின்!
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்!”

என்று தம் திருமந்திர நூற்பாடல் வாயிலாக அறிவுறுத்தி யுள்ளார், திருமூலர் என்றோ எழுதி விட்டாரே! எவரேனும் ஆசையை விட்டார்களா? மக்களின் ஆசை வெள்ளத்தை அணைபோட்டு அடக்கிவிட முடியாது. அவர்களை எந்த வகையிலாயினும் கோடீசுவரர்களாக ஆக்கியே தீரவேண்டும். அதற்குப் பல வழிகள் உள்ளன; அவற்றுள் அரிய வழிகளும் உள்ளன- எளிய வழிகளும் உள்ளன. இப்போது நமக்குத் தேவை எளிய வழியே-கோடீசுவரர் ஆவதற்கு ஓர் எளிய வழி கண்டுபிடிப்போமே! ஆனால், அதைக் கண்டுபிடிக்கும்.அரிய முயற்சியும் நமக்குத் தேவையில்லை. திருவள்ளுவர் ஓர்எளிய வழியைக் கண்டுபிடித்துக் கூறிச் சென்றுள்ளார். இதோ அந்த வழி:

"இல்லையென மறைப்பாரிடம் அல்ல-மறைக்காது கொடுப்பவரிடத்தும், மனம் கசந்து கொடுப்பவரிடம் அல்ல-மனம் கசக்காது கொடுப்பவரிடத்தும், முன் பின் அறியாத யாரோ ஒருவரிட மல்ல-மறைக்காமல் மனம் உவந்து கொக்கக் கூடிய கண்போன்ற வள்ளல்களிடத்துங் கூட ஒன்று வேண்டும் என இரந்து கேட்காதவரே கோடீசுவரர் ஆவார்"-என்பதுதான் வள்ளுவர் கூறியுள்ள எளிய வழி. இந்தக் கருத்து,

‘கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும்’-(1061)