பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/179

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

177

மக்கள் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து நின்ற பின்னரே எழுத்தாளர்களால் ஏட்டில் இடம்பெறும். பின்னர், அக்கலையை இப்படித்தான் கையாளவேண்டும் என்ற இலக்கண வரையறையும் ஏற்படும். அவ்வாறே ஒப்புமைக் கலைக்கும் தொல்காப்பியத்தில் இலக்கணம் வகுக்கப் பெற்றுள்ளது.

(20) நன்கு தெரியாத ஒரு பொருளை விளக்க, அப் பொருளோடு வினை(செயல்),பயன்,மெய் (வடிவ அமைப்பு), உரு (நிறம்) ஆகிய நான்கனுள் ஒன்றோ பலவோ ஒத்துள்ள நன்கு தெரிந்த வேறொரு பொருளை மாதிரியாக எடுத் துக்காட்டுவது உவமம் ஆகும். ஒப்புமை கூறுவது உவமம்ஒவ்வுவது உவமம்.

"வினைபயன் மெய் உரு என்ற நான்கே
வகைபெற வந்த உவமத் தோற்றம்.”
'விரவியும் வரூஉம் மரபின என்ப.'

என்பன தொல்காப்பிய நூற்பாக்கள். வினை, பயன், மெய், உரு ஆகியவை, சொல்ல வந்த பொருளுக்கும் ஒப்புமைப் பொருளுக்கும் இடையே உள்ள பொதுத் தன்மைகளாகும் என்னும் கருத்து, மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே ஒப்புமைக் கலை பெற்றுள்ள உயர் வளர்ச்சியின் நுட்பத்தை அறிவிக்கிறது. எடுத்துக்காட்டுகள்:புலி யெனப் பாயும் மறவன்-இது வினையுவமம்; பாய்தல் -வினை. மழைபோல் பயன்படும் கை-இது பயன் உவமம். உடுக்கை போன்ற இடுப்பு-இது மெய் உவமம். பொன் போன்ற மேனி-இது உரு (நிறம்) உவமம்.


  • தொல் காப்பியம்-உவம இயல்-1,2,