பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

187

செல்கிறேன் என்றால், அண்ணாமலை நகருக்குச் செல்கிறேன் என்று பொருள்படுவது போன்றதே அது.

பதினாறாம் நூற்றாண்டில். மண்டல புருடரால் இயற்றப் பெற்ற சூடாமணி நிகண்டு, சிதம்பரத்தின் வேறு பெயர்கள் புலியூர், தில்லை என்பன என்று கூறுகிறது.

‘புலியூர் தில்லை கதிதரு சிதம்பரப்போர்”

என்பது சூடாமணி நிகண்டு நூற்பா. புலிக்கால் முனிவர் (வியாக்கிர பாதர்) வழிபட்ட இடமாதலின், சிதம்பரம் புலியூர் எனப்பட்டது-என்பது புராணக்கதை. பண்டு தில்லை என்னும் மரங்கள் காடாக இருந்ததால், சிதம்பரம் தில்லை என்றும் தில்லை வனம் என்றும் வழங்கப்பட்ட தாம். இஃதிருக்க, எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற சேந்தன்திவாகர நிசுண்டு என்னும் நூல், சிதம்பரத்தின் பழைய பெயர் 'மன்றம்’ என்று கூறுகிறது.

“கூடல் மதுரை; மன்றம் சிதம்பரம்’

என்பது திவாகர நிகண்டு நூற்பா. திவாகர நிகண்டு காலத்தைச் சேர்ந்த பிங்கல நிகண்டும் இவ்வாறே கூறுகின்றது.

இதுகாறும் கூறியவற்றால், சிதம்பரத்தின் உண்மையான பழம் பெரும் பெயர் மன்றம் என்பதும், அப்பெயர் ஏற்பட்ட இயற்கை வரலாறும் தெள்ளிதின் விளங்கும். மன்றம் வாழ்க!