பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/198

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196


"சொல்லுகிறேன். சொன்னாலாவது உங்கள் மனம் மாறாதா? பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு என் தாய்க்கு, எனக்கு இப்போது ஏற்பட்டது போன்ற முதல் அனுபவம் ஏற்பட்டதாம். என்னைப் போலவே என் தாய்க்கும் அப்போதே இந்தத் தொழிலில் விருப்பம் இல்லையாம். பாட்டியின் வற்புறுத்தலுக்காக இசைந்தாளாம். முதல் நாள் வரும் இளைஞரை எப்படியாவது வசப்படுத்தி மணந்துகொண்டு குடும்பவாழ்க்கை தொடங்கலாம் என்ற கனவுடன் ஒத்துக்கொண்டாளாம். வந்த இளைஞரோ பெரிய பணக்காரர் வீட்டுப் பிள்ளையாம். நன்றாக எனக்கு நினைவில்லை-படிப்புக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ அவ்விளைஞர் வெளியூரிலிருந்து வந்து அங்கே தங்கியிருந்தாராம். வந்த இடத்தில், என் பாட்டி சித்ராதேவி விரித்த வலையில் சிக்கிக் கொண்டாராம். என் தாயோடு முதல் தொடர்பு கொள்ளுமுன்பு, அவளை மணந்துகொள்வதாக வாக்குறுதி அளித்தாராம். அதன் பின்னரே என் தாயைத் தொட முடிந்ததாம். சில நாள் உறவுகொண்டிருந்து விட்டு, பின்பு என் தாய்க்குக் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, தன் பெற்றோருக்கு அஞ்சிச் சொந்த ஊருக்கே ஓடிவிட்டாராம்."

"ஊம், அப்புறம்?"

“ஓடியவர் ஓடியவரே என் தாய் ஏமாந்துபோனாள். அந்த இளைஞரின் தொடர்பால் அவள் கருவுற்றாளாம். அவரைக் காணாத ஏக்கத்தால் வருந்திப் புலம்பிக்கொண்டிருந்தாளாம். ஆனால் என் பாட்டிக்கோ, தன் மகள் வருந்துவது பெரிய பித்துக்கொளித்தனமாகப்பட்டது. இந்த வண்டு போனால் இன்னும் உயர்ந்த வண்டு வரும் என்று சொல்லித் தேற்றினாளாம். பாட்டியின் கடல் போன்ற அனுபவத்தில் இந்நிகழ்ச்சி ஒரு சிறு துளியாக