பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

பச்சைப் பாம்பெனப் பின்னிக் கிடக்கும் பசுங் கொடிகளின் அழகும் அவற்றினின்றும் அரும்பியுள்ள நகைமலரின் அழ கும் மக்கள் உள்ளத்து உள்ள இன்ப ஊற்றைத் திறப்பன அல்லவோ? மயிலாடும் அழகும் மான் நடக்கும் அழகும் நந்துாரும் அழகும் புலவருக்கு விருந்தல்லவா?”

திரு.வி.க. பழமையில் புதுமையும் புதுமையில் பழமையும் காணும் இயல்பினர் என்பதை விளக்கும் உரை நடைப் பகுதி ஒன்றின் அழகினைக் காண்பாம்:

"ஆராய்ச்சித் துறை நண்ணாது, ஒன்றைப் பழைமை என்றதும் அதனைப் போற்றவோ தூற்றவோ புகுவதும் அவ்வாறே ஒன்றைப் புதுமை என்றதும் அதனைத் துாற்றவோ போற்றவோ புகுவதும் பகுத்தறிவுச் செயல் கள் ஆகா. பழைமையில் நல்லனவும் இருக்கலாம்; தீயனவும் இருக்கலாம். அங்ஙனமே புதுமையிலும் தீயனவும், இருக்கலாம்; நல்லனவும் இருக்கலாம். பழைமை புதுமை என்னும் அளவின் நின்று, ஒன்றைக் கொள்ளல் அல்லது தள்ளல் அறிவுடைமை ஆகாது. அதன் அதன் தன்மைகளை நன்கு ஆராய்ந்து உணர்ந்த பின்னரே தள்ளல் -கொள்ளல் விதிப்பது அறிவுடைமை".

அடுத்து, 'நவ சக்தி’ என்னும் வார இதழில் 'கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும் என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ள ஒரு பகுதி வருமாறு:-

“ஏட்டுக் கல்வியை ஒரளவு நிறுத்திக் கொண்டு, அதன் பொருளாயுள்ள இயற்கைக் கல்வியில் கருத்திருத்தப் பயில வேண்டும். இயற்கை பெரிய பல்கலைக்கழகம். அக் கழகத்திற் பயிலப் பயில அஃது இறைக் கல்வி யாகிய இன்பம் ஊட்டும். இறைக் கல்வி அழியாதது; அருளுடையது; அறியாமையைக் கல்லும் ஆற்றல் அதற்கே உண்டு.