பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

கிடக்கிறது. தமிழ் நாட்டு வரலாறு அன்றுதொட்டு இன்று வரை தமிழர்களால் முறையாக எழுதி வைக்கப்படவில்லை என்னும் குறைபாட்டை நாம் கூசாது ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். ஒருவேளை, ஒரு காலத்தில் எழுதிவைக்கப்பட்டிருந்த பழந்தமிழ் வரலாற்று நூல் மறைந்துபோய் விட்டதோ என்னவோ! தமிழில், இருக்கும் நூல்களை விட, இருந்து மறைந்துபோன நூல்களின் பட்டியல் மிகவும் நீளமான தன்றோ?

எது எங்ஙன்ச் மாயினும், தமிழ் நாட்டின் மிக்க பழங்கால வரலாற்றை அறிந்து கொள்ளச் சான்றாக உதவும் வேர் மூலங்கள் (Sources) சங்ககால இலக்கியங்களேயாகும், தமிழர் வரலாறு’, ‘தமிழக வரலாறு' முதலிய பெயர்களில் இப்போதுநம்மிடையே உலவிவரும் வரலாற்று நூல்களெல்லாம் சங்ககால இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டுஎழுதப்பட்டனவேயாகும். சங்ககால இலக்கியங்களிலும் பழந்தமிழர் வரலாறு முறையாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை-ஆங்காங்கே சிற்சில வரலாற்றுக் குறிப்புகளே காணக்கிடக்கின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்ட இக்காலத் தமிழ் வரலாற்றறிஞர்கள் தமிழக வரலாற்றையும் வேறு சில நாடுகளின் வரலாற்றுத் துணுக்குகளையும் ஒரு தோற்றமாக (உத்தேசமாக) நுனித்துணர்ந்து (யூகித்தறிந்து) எழுதியுள்ளனர். தமிழ் நாட்டுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொண்டிருந்த பிற நாடுகளைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் சிற்சிலவும் சங்க இலக்கியங்களிலே ஆங்காங்கே பொதிந்து கிடக்கும் உண்மை ஈண்டு உணரத்தக்கது.

வரலாறு என்றதும், அரசர்க்கு அரசர்களின் ஆரவார வாழ்க்கையும் அவர்களின் அடி பிடி மல்லுமே சிலருக்கு நினைவு வரக் கூடும். ஆனால், சங்க இலக்கியங்களில், முடியுடைப் பேரரசர்களின் வரலாறுகளே யல்லாமல்