பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்

39

ஐந்தாம் மாதத்திலே நகமும், உரோமமும் முளை விடுகின்றன. புருவத்திலும் இமையிலும், மண்டையிலும் மூன்றாம் மாதத்திலேயே உரோமம் தோன்றிவிடும். ஆனால் சாதாரணமாக ஆறாவது அல்லது ஏழாம் மாதத் தொடக்கத்தில்தான் உடம்பின் மேல் பாகத்தில் உரோமம் தெரியத் தொடங்கும். முதலில் வளரும் உரோமம் மிக மென்மையானது. எட்டாவது மாதத்திலே இது பெரும்பாலும் உதிர்ந்து போகும். குழந்தை பிறந்த பிறகு முழுவதும் உதிர்ந்து புதிய உரோமம் வளரும்.

உரோமத்தின் அடிப்பாகத்திலிருந்து ஒருவித எண்ணெய்யைச் சுரக்கும் சுரப்பிகளும் தோன்றி ஐந்தாம் மாதத்தில் வேலை செய்கின்றன. அவற்றிலிருந்து வெளியாகும் எண்ணெய்ப் பசை மேல் தோலில் படிந்து உடம்பைப் பனிக் குடத்திலிருக்கும் நீரில் கலந்துள்ள மாசுகளிலிருந்தும் காக்கிறது.

மூன்றாம் மாதத்திலே மூடிய இமைகள் ஆறாம் மாதத்திலே திறக்கின்றன. கண்களை அப்பொழுது பாதுகாக்கத் தொடக்கத்திலே அவற்றின்மேல் ஒரு மெல்லிய படலம் போன்ற போர்வை இருக்கின்றது. இது சாதாரணமாக ஏழாம் மாதத்திலே நீங்கிவிடும். கருவின் ஆரம்ப காலத்திலே அதன் உடம்பின் மேலுள்ள மீத்தோல் மிக மெல்லியதாக இருக்கும். அதனால் அடித் தோலின் நிறம் வெளியிலே நன்கு தெரியும். மேலும் அப்பொழுது தோலின் அடிப் பாகத்தில் கொழுப்பே சேர்ந்திருப்பதில்லை. ஏழாம் மாதத்தின் இறுதியிலிருந்துதான் கொழுப்பு சேரத் தொடங்கி உடம்பிற்கு நல்ல வடிவம் கொடுக்கிறது.