பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைச்சொல் விளக்கம்

61

பூரித்த அண்டம் (Fertilised egg)-முதிர்ந்த அண்டத்திற்குள் முதிர்ந்த விந்தணு ஒன்று பாய்வதால் அது கருவாக மாறுகிறது. அப்படி மாறும் அண்டத்திற்குப் பூரித்த அண்டம் என்று பெயர். இது இரண்டாகவும், நான்காகவும் எட்டாகவும் இரட்டித்துப் பிரிந்து பிரிந்து வளர்ச்சிப் பெற்று உடலின் பல அங்கங்களாகின்றது.

மஞ்சலரி (Corpus luteum)–கருத்தரித்து விட்டால் சுரப்பிபோல இது உதவுகிறது. கருவை ஏற்று வளர்க்கக் கருப்பையின் உட்புறச் சுவர்களைத் தயார் செய்வதும், பால் சுரக்கச் செய்வதும் இதுவே.

யோனி (Vagina)-கருப்பையிலிருந்து வெளிப்பாகத்திற்கு வழியாக உள்ள குழாய். இதில்தான் கலவியின்போது விந்தணுக்கள் சேர்கின்றன.

விந்து (Semen)-ஆண் மகனின் விந்துச் சுரப்பியில் உண்டாவது. இதில்தான் லட்சக்கணக்கான விந்தணுக்கள் இருக்கின்றன.

விந்துச் சுரப்பி (Testis)-விந்துவை உண்டாக்கும் ஆணுறுப்பு.

விந்தணு (Sperm)-ஆணின் விந்துச் சுரப்பியில் உண்டாகும் உயிரணு. இதற்கு வால் போன்ற ஒரு உறுப்பு இருப்பதால் அதைச் சுழற்றுவதன் மூலம் முன்னேறிச் செல்லும். வெளிப்பட்டுச் சுமார் ஒரு வாரம்வரை உயிருடனிருக்கும்.

விந்து நாளம் (Sperm duct)-விந்துச் சுரப்பியிலிருந்து விந்துவை விந்துப் பையில் சேர்க்க உதவும் குழாய்.

விந்துப் பை (Sperm sac)-விந்து முதலில் வந்து சேரும் பை. கலவியின்போது இப்பை சுருங்குவதால் விந்து சிறுநீர்ப் புறவழியின் மூலம் வெளிப்பட்டு யோனியில் சேர்கிறது.

ஜீனு (Jene)-நிறக்கோலில் உள்ள நுட்பமான அம்சங்கள். இவைகள்தான் பாரம்பரிய அமைப்புக்குக் காரணமாகின்றன.