பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100


“நான் நிச்சயமாக இன்னிக்கு ராத்திரி வரத்தான் போறேன். அப்படித்தான் உங்களை நேற்று பார்த்தது முதலே திட்டம் போட்டிருந்தேனாக்கும் !”

“உங்க அன்பு பெரிசுங்க. ஆனால் நீங்க வர வேண்டாம். செங்கோடன் மகா முரடன் !” அவள் குரலில் பயம் மண்டிக் கிடந்தது.

“நீங்களே அம்முரடனைப் பற்றிக் கவலைப்படாதிருக்கையிலே, எனக்கு மட்டும் அவனைப் பற்றி என்ன கவலை? மீண்டும் நாம் இன்றிரவு அதே இடத்தில் சந்திப்போம் !”

அவள் அவனை நாணப்புன்னகையுடன் பார்த்துத் தலையைக் கவிழ்ந்துகொண்டாள், “ம்.... இன்றிரவு சந்திப்போம்!” என்று சூட்சுமமாகச் சொல்லி விளக்கமாகச் சிரித்தாள். “உங்க பேர்?” என்று கேட்டாள்.

அவன் தன் பெயர், இடம் முதலிய விவரங்களைச் சொன்னான்.

அவள் அதிசயக்குறியை ஏந்தியவாறு விடை பெற்றுப் பிரிந்தாள்.

அவன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். கனவு போலவும், சினிமாக் காட்சி போலவும் நடந்துகொண்டிருந்த நிகழ்ச்சிகளை மெல்ல, அசை போட்டவனாக அவன் ‘ஸ்டீரிங்கை’ இயக்கினான்.

பங்களா வந்தது.

வெளிப்புற வாசலில் காரைச் செலுத்தினான்.

அப்போது, செங்கோடன் வெற்றி மிடுக்குடன் அந்த வெளிப்புற வாசல் வழியே வெளியேறிக்கொண்டிருந்தான். ‘இந்தப் பயங்கர முரடன் இங்கேஏன் வர வேண்டும் ? அப்பாவுக்கு இவனை எப்படித் தெரிந்திருக்கும் ?’ என்ற கேள்விக் கணைகள் அவன் நெஞ்சைத் துளைத்தெடுக்கத தொடங்கின !