பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

பெரியவரோ கை கழுவக்கூட நினைவின்றி, பிரமை தட்டிப் போய் நின்றார்.

அப்போது பார்த்துத்தானா ஞானபண்டிதன் காரிலிருந்து திரும்பி மாடிக்கு வரவேண்டும் ? தன் தந்தையின் மலைப்புத் தட்டிய கோலத்தைக் கண்டு அவனும் மலைப்புத் தட்டிப் போனான். என்றாலும், நிலைமையை அனுசரித்து அவன் தன் நிலை எய்தினான். ‘அப்பா’ என்று கூப்பிட்டான்.

அவர் சுதாரித்துக்கொண்டு கை கழுவிக்கொண்டே “தம்பி, சாப்பிட்டியா ? நீ சாப்பிட்டிருப்பாயின்னு இப்பதான் நான் சாப்பிட்டேன். நீ சாப்பிட்டியா ? சாப்பிடு தம்பி !” என்றார்.

அவன் சாப்பிடவில்லை. ஆனாலும் சாப்பிட்டதாக மறுபடியும் ஒரு பொய்யைச் செப்பினான். வெறும் உண்மையை நம்பி மட்டும் இந்தப் பொய்யான வாழ்விலே வாழவே முடியாதோ என்னவோ?...

“அப்பா !”

“என்ன தம்பி ?”

சுருட்டு புகைந்தது.

“உங்களுக்கு செங்கோடனைத் தெரியுமா ?” என்று கேட்டுவிட்டு, அதே சடுதியில் அவர் முகத்தை உற்றுப் பார்த்தான் அவன்.

“தெரியும். பாவம், அவன் ஏழை. எப்போதாச்சும் பணமுடைன்னா, என்னைத் தேடி வருவான், கொடுப்பேன். ஆள் பார்க்கிறதுக்கு முரடன் ! ஏன் தம்பி ; உனக்கு அவனை எப்படித் தெரியும் ” என்று வெகு இயல்பான தொனியில் அவனை அவர் விசாரித்தார்.

அவன் நடந்த நடப்பைக் கொஞ்சம் காது மூக்கு வைத்துத் திரித்துச் சொன்னான். “அவன் என்னமோ பொம்பளை விஷயமா தப்புததண்டா செஞ்சிட்டானாம். சபாலீசிலே மாட்டிக் கிட்டானம் !...” என்றான்.

அவன் பதிலைச் சொல்லிவிட்டு முன் போல இப்போதும் பெரியவரை நோக்கிக் கண்களை விரித்தான்.

இப்போது அவர் முகம் எத்துணை தெளிவான பிரகாசம் எய்திவிட்டது !