பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

ஞானபண்டிதனுக்கு அப்பேச்சு என்னவோமாதிரி இருந்தது. தன்னே மாலையும் கழுத்துமாகப் பார்க்க வேண்டுமென்று ஒரு நாள் பிரஸ்தாபம் செய்த பேச்சுக்கு இம்முன்னுரை ஏதோ பீடிகையாக இருக்குமோ என்றும் அவன் குழம்பினான்.

தோட்டத்தின் வாசலைத் திறந்துவிட்டான் காவலாளி.

கார் உள்ளே தவழ்ந்தது.

இரு புறமும் தென்னை மரங்களின் ஊசி நிழல்கள் மண்ணில் கறுப்புப் பாய் விரித்திருந்தன.

இளங்காற்று இதமாக வீசியது.

உள்ளே சிறிய அழகிய வீடு தென்பட்டது.

“வாங்க ஐயா !...வாங்க தம்பி !” என்று பண்பும் பாசமும் மிளிர முகமன் மொழிந்தாள் ஒர் அம்மணி. ஐம்பது தாண்டியிருக்கும். நெற்றித் திலகம் துல்லியமான எடுப்புடன் மங்களகரமாக விளங்கியது, அந்தத் தாயின் அசைக்க முடியாத நன்னம்பிக்கையாக ! தன் மாங்கல்யத்துக்கு யாதொரு பயமும் சம்பவிக்காது என்ற திடமுடன் !

பெரியவர் சோமசேகர் தலைமுடியைக் கோதினார். நரை முடிகள் பறந்தன. லெனின் இளக் தாடியை வருடிக்கொண்டார். தலை குனிந்தபடி உள்ளே முன்னதாகச் சென்றார். “வா தம்பி !” என்றார்.

“இதுதான் தம்பி — ஞானபண்டிதன் !” என்றார் அந்த அம்மணியிடம்.

"அப்படித்தான் நெனச்சேன்,” என்று சொன்னாள் அந்த அம்மாள்.

வீட்டினுள் பிரவேசித்தார்கள்.

பாயில் அமர்ந்தார்கள்.

எங்கும் நிர்மலமான அமைதி கனிந்திருந்தது.

“அம்மாவை நான் இதுக்கு முந்தி ஒரு தரம்கூட பார்த்ததாக ஞாபகமில்லையே, அப்பா ?” என்றான் ஞானபண்டிதன்.

“நீ பார்த்திருக்க முடியாது!” என்றார் சோமசேகர்.

உட்புறம் இருபெண் குரல்கள் மெல்லிய குரலில் பேசுவது லேசாகக் கேட்டது.

“அன்னபாக்யத்தம்மா, எங்கே உங்க மகள் குழலி ?”