பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

குமே வாய்ப்பில்லாமல் போய்விடும் போலிருக்கிறதே ?... அப்படியும் சொல்லிவிட முடியாது ! ஆம், மெய்தான் !... அபலைப் பெண்ணுக்கு வாழ்வு தந்த பெருமையை எனக்கு என் மனம் அளிக்கும். அதன் மூலம் எனக்குரிய என் கடமையும் பூர்த்தியாகக்கூடும். சந்தர்ப்பம் அறிந்து, பூவழகியை மீண்டும் சந்திக்கும் தருணத்தில் என் உள்ளத்தை — என் முதற்காதலைத் தெரிவித்துவிட வேண்டும் !... அவளது தூய்மை மண்டிய அந்த அன்பு, எனக்கு என் வாழ் நாள் பரியந்தம் நிரந்தரமான கொழுகொம்பாகப் பயன்பட்டு, அதன் மூலம் என்னுடைய பாசக் கொடியும் அவள்மீது படர முடியுமல்லவா ?....! என்று அவன் மனம் எண்ணியது.

அதே சமயம் தன் காதலுக்கு எதிர்ப்புச் சக்திகளாக அமையவல்ல இரு நபர்களைப்பற்றியும் ஞானபண்டிதன் மறந்து விடவில்லை. ஒரு நபர் : அவன் தந்தை. அடுத்த புள்ளி : செங்கோடன். செங்கோடனைப் பற்றி அவன் சிறிதும் அக்கறைப்படவில்லை. அவனைச் சட்டத்தின் பிடியில் அகப்படச் செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் ! சோமசேகரிடம் பொய்யாகச் செங்கோடன் ஜெயிலில் அடைபட்டுவிட்டதாகச் சொன்னது உண்மையாக நடக்காது என்பது என்ன நிச்சயம் ? போக்கிரிகளின் வாழ்வில் ஒரு பகுதி சிறையில்தானே கழிகிறது !...

ஆனால் பெரியவர் ?

தோட்ட வீட்டுக்குத் தன்னை அழைத்துச் சென்றதற்கும் ஏதோ ஒர் உட்பொருள் இருக்குமென்றும் அவன் ஆலோசனை செய்தான். குழலியின் இனிய முகமும், அந்த வலது கன்னத்து மச்சமும் அவன் உள்ளக்கிழியில் உருவாகின ! அப்போது அவனையும் அறியாமல் அவன் மனத்தில் பாச வெள்ளம் பொங்கிப் புரண்டது !.... ஆனால் ?... என் நெஞ்சத்துத் திரையிலே முதன் முதலாகப் புனையா ஒவியமாகிவிட்டவள் அபலைக் கன்னி பூவழகியேஅல்லவா ?....’ இவ்வெண்ணம் தோன்றியதும் அவன் நெஞ்சத்தில் காதல் வெள்ளம் சுரங்தோடியது.

ஞானபண்டிதன் திரும்பி, விழிகளை நேர்வசமாய் உயர்த்தி விட்டான்.

கடல் அலைகள் ஆரவாரம் செய்த வண்ணம் இருந்தன.