பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

கேள்விப்பட்டிருந்தான். அப்படி இதுகூட காளமேகத்தின் அனுபவப் பழைமையின் அடிப்படையில் உருவாகியிருக்கலாமோ என்றும் அவன் கருதினான்.

மறுநாள் அவன் தொழிற்சாலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அப்போது டயர் தொழிலகம் பற்றி அவன் செக்ரட்டரி மோகன் ‘போன்’ மூலம் பேசினான். அதையடுத்து, காளமேகம் ‘போன்’ செய்தான். பேச்சோடு பேச்சாக, ஓர் உண்மை தெளிவானது. அவன் சந்தேகப்பட்டது போலவே, அக்கதை காளமேகத்தின் சொந்த வாழ்வின் ஒரு பகுதியையே பிரதிபலித்ததாம் !

மூன்று நாள் கழித்து காளமேகத்தை வரும்படி கோரினான் ஞானபண்டிதன். பவுடர் தூள்களை எடுத்துப் பூசிக் கொண்டிருந்தான். “புறப்படலாமா தம்பி ?” என்று கேட்ட வாக்கில், மெல்லிய நுனிப்பிரம்புக் கழியுடன் வந்தார் சோமசேகர். இழைப்பு லேசாக தடம் காட்டிற்று.

“ஆகட்டுங்க !” என்று புறப்பட்டான்.

“சற்று இரேன். போகலாம் !”

“ஓ !”

“தம்பி !”

“சொல்லுங்க !”

“உன் அப்பாவை நீ மறந்திட்டே போலிருக்குது !” என்று சிரித்தபடி மகனை ஆழமாகப் பார்வையிட்டார் அவர்.

அவனுக்குத் ‘திகீ’ரென்றது. அவன் அவரை ஊடுருவி நோக்கினான். “உங்களை மறந்திட்டு நான் எப்படிங்க அப்பா உயிரோட இருக்க முடியும் ?” என்று ஆதரவாகவும் அன்பாகவும் பேசினான் ஞானபண்டிதன்.

சோமசேகர் தம் கண்களைத் துடைத்துக்கொள்ள வேண்டியவரானார்.

“தம்பி !”

“சொல்லுங்கப்பா !”

“உன் திட்டம்தான் என்ன ?”

என்னோட திட்டம் பூவழகியின் கையிலேதான் இருக்குது !” -

“ஆனா, அதோட முடிவு...?”