பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

“மேலே போவோம்,” என்றான் சிவஞானம், குழந்தையை வலது தோளுக்கு வசம் மாற்றிக்கொண்டு. முழங்கையை உயர்த்தி நெற்றி வேர்வையைத் துடைத்துக்கொண்டான்.

வழி காட்டிய மாடிப்படிகளில், தானே ஒருவழிகாட்டி போல இயங்கிய வண்ணம் படிகளில் ஏறினான் அவன். இடது தோளில் ஊசலாடிக்கொண்டிருந்தது, பையிலிருந்த பாலூட்டும் சீசா.

மாடித்தளத்தில் சிவஞானம் வந்து நின்றான். தெற்குப் பார்த்து நின்ற அறைகளின் வரிசையைப் பார்த்தான் அவன். பிறகு, நடந்தான் பழக்கப்பட்ட கால்கள் அந்தக் கோடி அறையின் முன்னே நின்றன.

ஆம்! அதுதான் இருபத்தைந்தாம் எண் அறை.

“உள்ளே வாப்பா,” என்று ரிக்ஷாக்காரனை நோக்கி அழைத்தான் சிவஞானம். அவன் முன்கூட்டியே அவ்வறைக்குள் பிரவேசித்தான். புதிய விரிப்புக்களுடன் விளங்கிய இரு மெத்தைகளைக் கண்கலங்க நோக்கினான். மனத்தைத் திடம் செய்துகொண்டு, மெதுவாகக் குனிந்து, கீழ் மூலைக் கட்டிலின் மெத்தையில் குழந்தையைக் கிடத்தினான் : பழந்துணிக் கிழிசலைக் குழந்தையின் இடுப்புக்குக் கொடுத்தான். குழந்தை விழித்துக்கொண்டது. பெருங்குரலெழுப்பி அழுதது. அதன் அழுகையை அடக்குவதற்குள் அவனுக்கு அழுகை வந்து விட்டது. கைக்குட்டையை எடுத்து குழந்தையின் வேர்வையை அங்கம் அங்கமாகக் கணித்துத் துடைத்தான். பையை எடுத்து, அதனடியிலிருந்த ‘ஜால்ரா’வை எடுத்து, ஆட்டினான். குழந்தையின் அழுகை நின்றால்தானே? அவன் நின்று கொண்டே யோசித்தான். அவன் கண்களுக்குப் பாலூட்டும் சீசா இலக்கானது. உடனே அவசரமாக அதை எடுத்தான். வாய் நுனியில் பொருத்தப்பட்டிருந்த ரப்பரைக் கைக்குட்டை கொண்டு அழுந்தத் துடைத்து, சீசாவைக் குழந்தையின் செப்பு வாயில் பொருத்தினான். பதட்டமான அவசரத்தோடு ரப்பரைச் சப்பி, பாலை இழுத்துக் குடிக்கத் துவங்கியது குழந்தை,

“ஈஸ்வரா!” என்று முணுமுணுத்தவனாகத் தன் கண்களைத் துடைத்துக்கொண்டான் சிவஞானம்.