பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

அவன் எண்ண முனைந்த சொல்லை——சொற்கோவையை முடிக்கவில்லையே. தன்போக்கில் விம்மினான் , தனக்குத்தானே விம்மினான் ; தன்னுள்தானே அழுந்தியவனாக விம்மினான். சுடு நீர்த்திவலைகள் பனியனை முத்தமிட்டன.

சிவஞானம் சுயப்பிரக்ஞை எய்தினான். கையிலிருந்த மல்லிகாவின் இறுதிப்பயண நிலைப்படம் அவனைப் பார்த்தது ; அவன் அப்படத்தைப் பார்த்தான். பிறகு, ஆல்பத்தைப் புரட்டினன் ; காலியாகக் கிடந்த வெற்றுத்தாளில் ஒட்டுவதற்கென்று அடையாளமாக வைத்துவிட்டு, எழுந்தான். மண்டை வலித்தது ; அத்துடன் நெஞ்சும் வலித்தது. தீப்பெட்டியும் சிகரெட்டும் அவனை நாடின. புகை சூழ்ந்தது. இருமல் சூழ்ந்தது. ‘இப்படியே இருமிக்கிட்டு இருந்தால், அப்பாலே என் கதி என்ன ஆகிறது? அப்புறம் என் அருமைச் செல்வத்தின் கதி என்னுவது ?’ - அந்நினைவு அவனுக்குப் பரீட்சை வைக்கக் காத்திருந்த அவனது மனச்சாட்சியின் முன்னறிவிப்புச் சோதனையாக அமைந்தது போலும் ! நினைவின் வெம்மை மாறும் முன், உதட்டுக்கங்கில் பட்ட கங்கின் சூட்டை உதறியபடி, சிகரெட்டுத் துண்டை உதறி வீசினான். ‘என் எதிர்காலம் என்ன வகையில் அமையப்போகிறது? என் ராஜாவின் எதிர் காலத்திற்கு என்ன வழி சொல்லப் போகிறேன் ?...’ அவனுள் வினாக்கள் தொடர்ந்தன. தும்மினான். மூக்கை உறிஞ்சிக் கொண்டான். பட்டணத்திற்குப் போனதும், ஆயா ஒருத்தியை நன்கு பரீட்சை செய்து நியமிக்க வேண்டுமென்று கொண்டு வந்த முடிவு, அவனுள் விசுவரூபம் எடுத்த நேரத்தில், ரிக்ஷாக்காரன் ராமையா விசுபரூபம் கொண்டு, அவன் மனத்திரையில் புகுந்து சிரித்தான். அவன் தெரிவித்த ‘இரண்டாவது அம்மா’ பிரச்சினை, ஏன் சிவஞானத்தை அப்படிப் பாடாய்ப் படுத்தியது?

இந்த முப்பது தினங்களாக——அல்ல——முப்பது யுகங்களாக அவன் கற்பனைகூட செய்து பார்த்திராத ஒரு சிக்கலைத் தோற்றுவிக்கத்தான் ராமையா தோன்றினானோ ?...

ஏதோ சத்தம் கேட்டது.

அண்ணுந்து பார்த்தான் சிவஞானம்.