பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

குழு சார்பில் உங்கட்கு அளிக்கப் பெற்ற விருந்து உபசரிப்பில் நீங்கள் உங்களது இலட்சியங்கள் குறித்துப் பேசியதை என்னால் மறக்கவே முடியாது. அபலைப் பெண்களின் நல் வாழ்வுக்குப் பாடுபடுவதும், ஏழைகளின் வாழ்வு உயர உழைப்பதுவும் உங்களது நிரந்தரப் பணிகளானால், அவையே உங்களை உச்சத்தில் கொண்டு வைத்துவிடும். என் பாராட்டுகள் எப்போதும் உங்களுக்கென ரிசர்வ் செய்யப்பட்டிருக்கும்” என்று சொன்னாள். அடுத்த வசந்தத்தில் நடக்கவிருக்கும் தன் திருமணத்துக்கு விஜயம் செய்யும்படியும் கோரினாள்.

அவன் அவசியம் வருவதாகக் கூறிவிட்டு, அவள் புது டில்லி விஜயத்தை முடித்துக்கொண்டதும் தகவல் தந்தால், அவன் அவளைப் புது தில்லியில் சந்திக்க முடியுமென்றும் தெரிவித்தான்.

"அது புது டில்லியிலுள்ள என் உறவினரின் செளகரியத்தைப் பொறுத்தது. எது எப்படி ஆனாலும், நம் நட்பு காலத்தாலோ, தூரத்தாலோ பாதிக்கப்படாததாகும்!” என்றாள் ஸ்டெல்லா.

அவள் பேச்சை ஆமோதித்துச் சிரித்தான் அவன்.

எல்லோரிடமும் ‘விடை’ பெற்றுப்புறப்பட்டாள் ஸ்டெல்லா ஜான்ஸன். போகும் தருணம் அவளது செவ்வரி படர்ந்த இமை வட்டங்களில் ஈரம் கரை-கட்டித் திகழ்ந்தது. கார் புறப்பட்ட து. அவனும் அவளுடன் புறப்படவே எண்ணியிருந்தான். ஏனோ சோமசேகர், அவன் அவளுடன் புறப்பட்டு வழியனுப்புவதை, விரும்பவில்லை. ஆகவே, அவள் மட்டுமே புறப்பட்டாள்!

இப்போது சோமசேகரும் ஞானபண்டிதனும் மாடியை அடைந்தனர். இருவரும் எதிரும் புதிருமாக அமர்ந்து உரையாடினர்கள். வாஷிங்க்டனிலுள்ள ‘ரிச்சர்ட்ஸன் அண்ட் ரிச்சர்ட்ஸன்’ கம்பெனியின் ஒத்துழைப்புடன் இங்கே டயர் செய்யும் தொழிலை ஆரம்பிப்பதற்கான தன் திட்டம் பற்றியும், அதற்கான வகையில் தன்னுடைய மேலை நாட்டுப் படிப்பு பூரணமாகக் கை கொடுக்கும் விதத்தையும் அவன் விஸ்தாரமாக விளக்கிக்கொண்டிருந்தான்.