பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

தினாலே உங்களுக்கு நல்ல சோறு வந்திடாது. ஆனா, எனக்கு உங்க கஷ்ட நஷ்டத்திலே பங்கு கொள்ள வேணுமிங்கிற மனம் இருக்குது. இதை நம்பினால், அதுவே எனக்கு நிம்மதி, என்று சொல்லி, காரை அங்கேயே நிறுத்துவிட்டு, மண்ணடிக் கடைத் தெருவுக்கு விரைந்து மீண்ட அவனிடம் சில பிரியாணிப் பொட்டலங்கள் இருந்தன. ஆளுக்கு ஒவ்வொன்றாகக் கொடுத்தான். அன்பின் பரிசாக ஆளுக்குப் பத்து ரூபாய்மேனி பனமும் கொடுத்தான். உழைப்பதற்கு லாயக்கற்றவர்களாகக் கணித்துப் பரிசில்களைப் பங்கிட்டுக்கொடுத்தான் அவன். உழைக்க முடிந்தவர்களிடம் உழைப்பின் தத்துவத்தைப் புரியும் விதத்தில் விளக்கினான் அவன்.

உதவிய உள்ளத்தின் பெயரைக்கூட அறியும் நினைவின்றி, அப்படியே நின்றார்கள் நடைபாதை மக்கள்.

ஞானபண்டிதன் பல்லாவரத்தை நோக்கிக் காரைச் செலுத்த எண்ணி ஒரு சந்தில் மடங்கினான்.

அப்போது, இருட்டைத் துளைத்துக்கொண்டு பெண்ணின் தீனக்குரல் ஒன்று ஒலித்தது. அவன் காரை நிறுத்திவிட்டு, ஒலம் வந்த திசைக்கு நடந்தான்.

அது ஒரு பாழடைந்த மனை. மாடியிலிருந்துதான் பெண் அழுதுகொண்டிருந்தாள்.

பின்கட்டுப் பகுதியில் நின்ற ஒரு கம்பத்தின் வழியே எறினான் ஞானபண்டிதன். சுவரில் இருந்த ஓர் ஒட்டை வழியே பார்த்தான்.

ஓர் இளம்பெண் கண்ணீரும் கம்பலையுமாக நின்றாள்.

அருகே, மொட்டை மண்டையும் பயங்கரமான முறுக்கு மீசையும் திகழ ஒரு முரடன் நின்றான்.

பக்கத்திலே, ஒரு பணக்காரத் தடியன் நின்றான்

இந்தாப் பாரு பூவழகி, நான் சொல்லுறதைக் கேட்டுக் கொள். நாளை ராத்திரி இதே நேரம் வரை உனக்கு யோசிக்க டயம் கொடுத்திருக்கேன், கெட்டிக்காரப் பொண்ணாக நடந்துக்கிட்டியானா, உனக்கும் நல்லது எனக்கும் நல்லது இல்லாப் போனால், எப்படியும் இந்தப் பணக்கார ஐயாவோட சொத்தாக அன்னை ஆக்கிப்பிட்டுத்தான் மறு ஜோலி பார்ப்பேன் நான் !...