பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

மறுதளிப்பது கொஞ்சமும் நல்லதல்ல என்றும் அவன் ஊகித்து உணர்ந்திருந்தான். உங்க இஷ்டப்படியே ஆகட்டும் !” என்று கண்களை மூடிக்கொண்டு சொல்லிவிட்டான்.

அவர் படுக்கைக்குத் தமது தனி அறையை நாடினார்.

ஞானபண்டிதன் எழுந்து, தன்னுடைய அறைக்குச் செல்ல மாடிக்கு ஏகினான். சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி அவன் அமர்த்தான். அப்போதுதான், அவன் தலையில் ஏதோ பாரம் — சுமை — ஏறியிருப்பதை உணரத் தலைப்பட்டான். அதுவரை இருந்த அமைதி பறிக்கப்பட்டதைப் போலவும் ஓர் ஏக்கம் அவனை அலைக்கழிக்க எத்தனம் செய்தது. ‘அப்பா இப்படிப்பட்ட குண்டை இவ்வளவு சீக்கிரம் போடுவார் என்று நான் ட்ரீம்கூட பண்ணலையே!... எனக்கென்று நானே எழுப்பிக் கொண்டுள்ள லட்சியங்கள், கடமைகள், கனவுகள் எல்லாம் என்னாவதாம் ?...டைலமாடிக் பொஸிஷனிலே நான் அகப்பட்டுக்கிட்டேனே ?’ — நெடுமூச்சு விட்டான் அவன்.

அப்போது, வரும் வழியில் சந்தித்துப் பிரிந்த — அல்ல, தான் மட்டிலும் பார்த்துப் பிரிந்த அந்தப் புதிய அழகுப் பதுமையின் நினைவு அவனுள் புறப்பட்டது. அப்போதே அவளுக்குத் தான் உதவ முடியாமல் சந்தர்ப்பம் குறுக்கிட்டதற்கு கழிவிரக்கம் காட்டி வருத்தப்பட்டான். எப்படியும் நாளை இரவு எட்டரை மணிக்கு அவன் அந்த இடத்திற்குப் போய்விட வேண்டுமென்ற திட சங்கற்பம் எடுத்துக்கொண்டு, மெத்தையைச் சரண் அடைந்தான். ‘ரிபெக்கா’ நாவல் பிரிந்தது.

அப்பொழுது :

டெலிபோன் மணி அழைத்தது.

நெருங்கினான்.

தன் தந்தையை யாரோ அழைத்தார்கள்.

“அவர் தூங்கிவிட்டார் ...நீங்கள் யார்? உங்க பேர் என்ன? என்ன விஷயம் !” என்று கேள்விகளை அடுக்கினான் அவன்.