பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுவைகளின் களஞ்சியம்

99


இரத்தினத்தை அறியும் 'வாஸனை' உள்ளிருப்பவர்களுக்கே பலதடவைப் பார்ப்பதால் அதனை அறியும் திறம் பெருகும். வாஸனை இல்லாதவர் பலநாட்கள் பல்லாயிரம் இரத்தினங்களைப் பார்த்தாலும் அவர் மனத்தில் யாதொரு மாறுபாடும் உண்டாக மாட்டாது. காவியத்தில் சுவை காண்பதும் அப்படித்தான். அதிலுள்ள மெய்ப்பாடுகளை அறிந்து சுவைப்பதற்குப் 'பரம்பரை வாசனை’ வேண்டும். அவற்றை அறிவதும் எளிதான செயலன்று.

ஒன்பது சுவைகள்

கவிஞர்கள் எல்லாப் பொருள்களையும் சுவையுடன் காணும் ஆற்றல் பெற்றவர்கள். அனைத்தையும் இன்பமாகப் பாவிக்கும் மனநிலை அவர்களிடம் அமைந்து கிடக்கின்றது. அத்தகைய மனநிலை உணர்ச்சியின் அடிப்படையில் தோன்றுவதாகும். பண்டைத் தமிழர்கள் அவ்வுணர்ச்சியை எட்டுவகையாகப் பிரித்துப் பேசினர். அவை நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன. பிற்காலத்தார் 'சமநிலை' என்ற ஒன்றைச் சேர்த்து சுவைகளை ஒன்பதாகக் கூறுவர். இந்த ஒன்பது சுவைகளையும் வடமொழியாளர்கள் முறையே ஹாஸ்யம், கருணம், பீபத்லம், அற்புதம், பயானகம், வீரம், ரெளத்ரம், சிருங்காரம், சாந்தம் என்று வழங்குவர். இச்சுவைகள் தோன்றி வளரும் செய்திகளை சுவை இலக்கண நூல்களில் கண்டறிக.

'கலிங்கத்துப் பரணி'யில் இச்சுவை வேறுபாடுகள் நன்றாகச் சித்திரிக்கப் பெற்றுள்ளன.