பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98


யும், கானப் பிழையும் இடம் பெறுமாயின், கண்டு கொள்வான் குலோத்துங்கன். அதனால் பிழையறக் கற்ற பாணர்களே, அவன் அவை வந்து பாடி நிற்பர் என்று கூறிக் குலோத்துங்கன் கலையுள்ளத்திற்குப் பாராட்டளிக்கிறது பரணி.

"தாளமும் செலவும் பிழையா வகை
தான்வகுத்தன தன்எதிர் பாடியே
காளமும் களிறும்பெறும் பாணர்தம்
கல்வியில் பிழை கண்டனன் கேட்கவே.”


சமயப் பொதுநோக்கு
: சமயப் போராட்டத்தால் சரிந்த பேரரசுகள் பல. அதனால், ஒரு பேரரசின் ஆட்சிப் பொறுப்பேற்றிருப்பவன் பால் அமைந்து கிடக்க வேண்டிய அரிய பண்புகளில், சமயப் பொறையும் ஒன்று. குலோத்துங்கன், தன் குல முன்னோர்களைப் போல், தில்லையில் நடம் புரியும் பெருமான் மீது பேரன்பு கொண்டு ‘திருநீற்றுச் சோழன்’ எனப் பெயர் பூண்டு சைவ சமய நெறி நின்றான். எனினும், அவன் பிற சமயங்களை வெறுத்தவன் அல்லன்; மாறாக, அவன் மனம், அச்சமயங்களிலும் ஆரா அன்பு கொண்டிருந்தது. வேங்கி நாட்டில் அவன் வாழ்ந்திருந்த போது, விஷ்ணு வர்த்தனன் எனும் வைணவப் பெயரையே விரும்பி மேற்கொண்டான். மன்னார்குடியில் இருக்கும் இராச கோபாலசாமி கோயில், குலோத்துங்கன் காலத்தில் எடுக்கப்பட்டதே; அது. அக்காலத்தில், குலோத்துங்க சோழ விண்ணகரம் என அவன் பெயரினாலேயே பெயர் சூட்டப்பட்டிருந்தது. தன் நண்பன், கடார்த்தரசன், நாகப்பட்டினத்தில், ஒரு புத்த விகாரம் அமைக்கவும், அதற்கு இராசேந்திர சோழப் பெரும்பள்ளி எனத் தன் பெயரைச் சூட்டவும் இசைவு தந்ததோடு அவ்விகாரத்திற்குச் சில ஊர்களை இறையி