பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5.மௌரியர் மரபு


"மறந்தும் மழைமறா மகத நன்னாடு”
"மகதத்துப் பிறந்த மணிவினைக் காரரும்
பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞரும்”

எனப் பண்டைப் பெரும் புலவர்களால் பாராட்டப் பெறும் பெருமை வாய்ந்தது மகதநாடு. ஆயிரம் மைல்களுக்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்திருந்த பெரும் புலவர்கள் அறிந்து பாராட்டுமளவு அனைத்துலக நாடுகளினும் உயர்ந்து விளங்கிய சீரும் சிறப்பும் வாய்ந்தது மகத நன்னாடு. வட இந்தியாவில், கங்கை பாயும் வளம் மிக்க நிலத்தில் விளங்கிய விழுச் சிறப்புடையது அம்மகத நாடு. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே, பேரரசாய் விளங்கிய பெருமை வாய்ந்தது. அந்நாடு. அந் நாட்டை அக்காலத்திலேயே ஆண்ட மன்னர் மன்னர் எண்ணற்றவராவர். தான் பிறந்த கிரேக்க நாட்டில் தொடங்கிய தன் வெற்றித் திருவுலாவைச் சிந்து நதியைக் கடந்த பின்னரும் கைவிடக் கருதாத கிரேக்கப் பெருவீரன் அலெச்சாந்தரின் ஆசைக் கனலை அவித்து வெற்றி கண்ட விழுச் சிறப்புடையது அம் மகதம்.

மாண்புமிக்க அம்மகத நாட்டிற்குத் தலைநகராகும் தனிச்சிறப்பு வாய்ந்தது பாடலிபுத்ரம்.கங்கைப் பேராறும், சோணையும் கவக்கும் இடத்தில் அமைந்திருந்த அந்