பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107


முதற் பேரரசன், மன்னர் மன்னவன், அரசர்க்கு அரசன் எனும் அழியாப் புகழ் அவனை வந்தடைந்தது.

சந்திரகுப்தன் வென்ற நாடுகளில் அமைதியை நிலை நாட்டி, ஆங்கு தன் ஆணை அழிக்கலாகாவாறு நடை பெறுதற்காம் வழிவகைகளை மேற்கொண்டிருக்குங்கால், வடமேற்கில் ஒரு பெரும்பகை உருவெடுத்தது. மாவீரன் அலெக்சாந்தர் மாண்ட பின்னர் அவன் வென்ற மேற்கு ஆசிய நாடுகளுக்கும், மத்திய ஆசிய நாடுகளுக்கும் செல்யூகஸ் என்பவன் தலைவனாக வந்து சேர்ந்தான். கிரேக்க வீரர்கள் வெற்றி கொண்ட இந்திய நாடுகளிலும், தன் ஆட்சி செல்ல வேண்டும் என அவன் விரும்பினான். தன் முன்னோன் வழி காட்டிய முறைப் படியே சிந்து நதியைத் தாண்டி, கங்கைச் சமவெளியுள் புகுந்து போரிட்டான்; ஆனால் அந்தோ! ஆங்கு அவன் வரவை எதிர் நோக்கிக் காத்திருந்த சந்திரகுப்தன் படை தன் படையைக் காட்டிலும் பன்மடங்கு பெருமை வாய்ந்திருந்ததை அறியாது போனான்; அதனால் வெற்றி தேடிப் புறப்பட்ட அவனுக்கு ஆங்கு தோல்வியே காத்திருந்தது. மகத நாட்டு மன்னன் மாபெரும் வெற்றி பெற்றான், சிந்து நதிக்குக் கீழ்ப்பால் உள்ள நாடுகளையும் ஆள வேண்டும் என்னும் ஆசை கொண்டு வந்த கிரேக்கக் காவலன், போர் முடிவில் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் பயனாய், அந்நதிக்கு மேற்பால் உள்ள தன் நாட்டிலும் பெரும் பகுதியை இழக்க வேண்டியதாயிற்று. இந்திய நாட்டின் எல்லைக்கு அப்பாற்பட்ட நாட்டில்; இந்தியப் பேரரசின் ஆணை செல ஆண்ட முதல் மன்னன் என்னும் மங்காப் புகழ் மகத நாட்டானுக்குக் கிட்டிற்று; ஆப்கானிஸ்தானமும், அதை யொட்டிய சிறு நாடுகள் சிலவும் சந்திர குப்தன் உடைமைகளாயின. இமயப் பெருமலையைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைய இடமளிக்கும் நுழைவாயிலாய் விளங்கிய கைபர் கணவாய், சந்திர குப்தன் காவற் கீழ் வந்துற்றது. இந்தியாவின் வடவெல்லைக் காவற் கூடற்களுள் தலை