பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108



சிறந்தது என மதிக்கப் பெற்று, இன்றும் பெரும்படை நிறுத்திக் காக்கப் பெறும் அக்கணவாயை, இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காத்து நின்றான் சந்திரகுப்தன் என்ற சிறப்பு அவனுக்கு வாய்த்தது. மகதத்தின் மன்னன் மாற்றானுக்குரிய மண்டலங்களைப் பெற்றதோடு நின்றானல்லன். அம்மாற்றான் பெற்றெடுத்த மகள், மாசிடோனியா நாட்டின் மங்கை, மகத நாட்டின் மாதேவியாய்ப் பாடலி வந்து சேர்ந்தாள். மகளை மணம் செய்து தந்த செல்யூகஸுக்கு, மன்னன் ஐந்நூறு ஆண் யானைகளை அளித்து, அவன் படை பெருகத் துணை புரிந்தான். மேலைநாட்டு மன்னனோடு மகதத்தின் காவலன் மேற்கொண்ட மணத் தொடர்பால் ஏற்பட்ட நட்பு, மகத நாட்டு அரசவையில் வந்து தங்கிய கிரேக்கத் தூதுவன் மெகஸ்தனிஸால் மேலும் வளர்ந்து வலுப் பெற்றது. மௌரியர் அரண்மனையில் வாழ்ந்திருந்த அவ்வரசியல் தூதுவன், மகத நாடு, அந்நாட்டின் தலை நகர் பாடலி, மகத நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள், அந்நாட்டின் ஆட்சி முறை ஆகிய அனைத்தைப் பற்றியும் விரிவாகவும், விளக்கமாகவும் எழுதி வைத்துள்ளான். அவன் அன்று எழுதி வைத்த அதுவே மௌரிய அரசைப் பற்றி நாம் அறிந்து கொள்ள இன்றும் நின்று துணை புரிகிறது. நிற்க,

தன் தோளாற்றலாலும், தன் படைத் துணையாலும் அடைந்த பேரரசில், தனக்கு அரசியல் வழிகாட்டியாய் விளங்கிய ஆரிய நண்பன் சாணக்கியன் துணையால், அமைதி நிலவும் நல்லாட்சி நிலவச் செய்தான் சந்திர குப்தன். நாகரிக நெறி நிற்கும் நல்லரசு என இக்கால வரலாற்றுப் பேராசிரியர்களாலும் வாழ்த்த வல்ல விழுமிய அரசாய் விளங்கிற்று சந்திரகுப்தன் கண்ட அம்மௌரியப் பேரரசு..

மகத நாட்டு மன்னன் கோயிலில், பொன்னும் நவ மணியும் மண்டிக் கிடந்தன: ஆறு அடி அகலம் வாய்ந்து,