பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
109



பொன்னாலும் வெள்ளியாலும் வனையப்பட்ட வண்ணக் கிண்ணங்களும், நுண்ணிய சித்திர வேலைப்பாடமைந்த அரியணைகளும், அரசு கட்டில்களும், செம்பால் செய்து, நவமணிகள் வைத்திழைக்கப்பெற்ற வகை வகையான கலங்களும், கண்ணைப்பறிக்கும் வண்ணம் ஊட்டிப் பொன்னிழை இட்டு நெய்த ஆடைகளும், அழகிய சட்டைகளும், மன்னன் கோயிலிலும், மன்னனுக்கு நிகரான மக்கள் தலைவர்களின் மாடங்களிலும் மலிந்துகிடந்து, அக்காலச் செல்வச் சிறப்பிற்குச் சான்று பகர்ந்தன. பெற்ற வெற்றி குறித்தும், பிறந்த நாள் குறித்தும் எடுக்கும் விழாக்காலங்களில், கருஞ்சிவப்புப் பட்டும், மஞ்சள் நிறப் பொன்னிழையும் கலந்து நெய்த கரையினைக் கொண்ட நுண்ணிய மெல்லிய மஸ்லின் துணியால்மூடி, முத்துச்சரங்கள் நாலவிட்ட பொற்பல்லக்கில் அமர்ந்து, அரசன் உலா வருவன். விழா நிகழ் இடங்களில், காளைச்சண்டை, ஆட்டுக்கிடாய்ச் சண்டை, யானைச்சண்டை, காண்டாமிருகச் சண்டைகளை,மன்னனும் மக்களும்கண்டு மனங்களிப்பர். வீரர்கள் மேற்கொள்ளும் வாட்போர், விற்போர் விளையாட்டுகளும், அவ்விழாக் களங்களில் நிகழ்வதுண்டு. இக்காலக் குதிரையோட்டப் பந்தயம் போல் காளைகளை ஒடவிட்டுப் பந்தயம் கட்டும் வழக்கத்தில், அக்காலத்தில் அரசர்களும் ஆர்வம் கொண்டிருந்தார்கள். இவ்விளையாட்டுக்களைவிட , நகர் நடுவே அமைத்த வேலிகளுக்கு இடையே வேட்டை விலங்குகளை விடுத்து, அவ்வேலியின் ஒரு கோடியில் அமைக்கும் உயர்ந்த மேடை மீது நின்று மன்னன், அவ்விலங்குகளை வேட்டையாடி மகிழும் விளையாட்டையே வேந்தர்கள் மிகவும் விரும்பினார்கள். அதற்கேற்ப, அவ்விளையாட்டு விழா ஏனைய விளையாட்டு விழாக்களைக் காட்டிலும் மிக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது.

அமைச்சர் முதலாயினோர் சூழ, அரசவையில் அமர்ந்து முறையளிக்கவும், குறைபோக்கவும், காடு