பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116


னோரைப் போலவே, தாம் வந்து வாழும் நாட்டைப் பற்றிய செய்திகளை விரிவாகக் குறித்து வைத்தார்கள். பிந்துசாரனின் வெளிநாட்டு உறவால், மகத நாட்டின் வாணிகம் பெரிதும் வளர்ந்து வளங்கொழித்தது. -

பிந்துசாரனுக்குப் “பகையரசர் குலகாலன்” எனும் பட்டப்பெயர் சூட்டிப் பாராட்டியுள்ளார்கள் கிரேக்கர்கள். மகதப் பேரரசை நிறுவிய சந்திர குப்தனுக்குப் பெருந் துணை புரிந்த சாணக்கியன், பிந்துசாரன் காலத்திலும் வாழ்ந்து, அவனுக்கு அரசியல் வழிகாட்டியாய் விளங்கினான். அவன் துணையால், பிந்துசாரன், மகதப் பேரரசை முன்னிலும் பன்மடங்கு பெரிதாக்கிப் பெருமையுற்றான்.

‘ஆரிய மஞ்சூரி மூல கல்பம்” என்ற புத்த சமய நூலின் ஆசிரியர், “நனிமிக இளைஞனாய் அரியணை அமர்ந்து, ஆண்மை, ஆற்றல், இனிய சொல்வன்மை போலும் நற்பண்புகளை நிறையக் கொண்ட பிந்துசாரன் காலத்திலும், அவ்வரசியல் அந்தணன் தோண்டாற்றினான்” என்று கூறுகிறார். சமண சமயப் பேராசிரியராகிய ஹேமச்சந்திரரும், அவ்விருவர் தம் நட்புறவினை நாவாரப் பாராட்டியுள்ளார். அவ்வந்தண நண்பனின் அருந்துணையால், பித்துசாரன் தன் பேரரசின் தென் எல்லையை விந்திய மலையிலிருந்து, வேங்கடத்திற்குக் கொண்டு சென்றான். வடமேற்கு மாநிலத்தில் சிந்து நதிக்கரையில் வந்து அரசமைத்து வாழ்ந்திருந்த வெளி நாட்டாரை வென்று துரத்தவும், மகதத்தின் அரியணையில் அமர்ந்திருந்த இழிகுலத்தானை இறக்கி விட்டு, அதில் தான் அமரவும்,வென்று கைப்பற்றிய நாட்டில் தோன்றிய கலகங்களையும், குழப்பங்களையும் அடக்கி அமைதி நிலை நாட்டவுமே சந்திரகுப்தனுக்குக் காலம் போதவில்லை. ஆதலின், அவன் விந்தியத்திற்கு வடக்கிலேயே நின்று விட்டான். அவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த பிந்துசார்னுக்கு வடநாட்டில் வேலையில்லை. ஆட்சி அமைதியுற, அசைக்க மாட்டா வன்மையோடு நடைபெற்று வந்தது.