பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117


ஆகவே அவன் சிந்தனை, விந்தியத்திற்கு அப்பால் உள்ள நாடுகள் மீது சென்றது. அவன் இளமைத் துடிப்பும், தோளாற்றலும், அவன் உள்ளத்தில் போர் வெறியைப் புகட்டின. உடனிருக்கும் அந்தண நண்பனும் அதற்குத் துணை நின்றான். ஆகவே நெடிய பெரிய தேர்ப்படைகளோடு கூடிய மகதப் பெரும் படை தென்திசை நோக்கிப் புறப்பட்டு விட்டது. தம் தேர்ப் படை செல்லாதபடி இடை நின்று தடுத்த மலைகளையெல்லாம் வெட்டியெறிந்து வழி செய்து கொண்டு விரைந்து சென்று, பல நாடுகளை வென்று கைப்பற்றியது வடநாட்டுப் படை. தமிழகமும், தென் கலிங்கமும் நீங்கலாக உள்ள இந்தியப் பெரு நிலம் எங்கும், பாடலிபுத்திரக் கொடி பெருமிதத்தோடு பறந்தது. தாரநாதன் என்ற திபேத்திய நாட்டு வரலாற்று நூலாசிரியர் “பிந்துசாரன் பதினாறு நாடுகளை வென்றான்; அவன் ஆட்சி குணகடல், குடகடல் என்ற இரு கடல்களுக்கும் இடைப்பட்ட ஒரு பெரு நாட்டில் இனிது நடைபெற்றது” என்று கூறுகிறார்.

வேங்கடம் வரை பரவிய ஒரு பெருநாட்டை வென்றும், பிந்துசாரன் போர் வேட்கை தணியவில்லை. அம்மலையை வடவெல்லையாகக் கொண்ட தமிழகத்திலும் தன் ஆணை செல்ல வேண்டும் என்று விரும்பினான். உடனே, வேங்கடத்தை அடுத்து வாழ்ந்திருந்த வடுக வேந்தனின் துணையோடு தமிழகம் புகுந்தான். வடுகப்படை முன் நடந்து வழி காட்ட வழியிடை மலைகளைக் குறைத்து வழி செய்து கொண்டு தமிழகம் புகுந்த மௌரியப் பெரும் படைக்கு, ஆங்கு வெற்றிக்கு மாறாகத் தோல்வியே காத்திருந்தது. மௌரியப் படை தமிழகம் புகுந்த காலை, மோகூரில், பழையன் எனும் பெயர் பூண்ட ஒரு பெரிய வீரன் வாழ்ந்திருந்தான். பாண்டியர் படைத் தலைவனாய்ப் பணி புரியும் அவன் கீழ், ஆற்றல் மிக்கவராய கோசர்களைக் கொண்ட ஒரு பெரும் படையும் இருந்தது. தமிழகத்தில் வெற்றிகாண வேண்டுமேல், இப்பழையனை