பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125


தான் மீண்டும் படையெடுத்தலும் கூடும் என்ற எண்ணங் கொண்டு முன்னிலும் பன்மடங்காக அதன் படை பலத்தைப் பெருக்கி வைத்திருத்தலும் கூடும்; ஆகவே, முதலில் தமிழக வெற்றியில் தலையிடல் கூடாது; கலிங்கம் அத்தகையதன்று, ஒருபுறம் மட்டும் கடல் எல்லையாக, ஏனைய மூன்று புறங்களிலும் தன் ஆட்சி நில்வும் நாடுகளே எல்லையாக அமைந்து கிடக்க நடுவில் நின்று தன் ஆண்மையை, ஆற்றலை எள்ளி நகைப்பது போல் காட்சியளிக்கிறது. மேலும் தமிழகத்தையும் வெல்ல வேண்டும்: அதிலும் தன் ஆணை செல்ல வேண்டும் என்று விரும்பி அதன் மீது போர் தொடுத்துச் செல்லும் போது தன் படைக்குப் பின்னே கலிங்கம் போலும் தன் கட்டுக்கடங்கா ஒரு நாட்டை விட்டு வைப்பது போர் முறையாகாது. ஆகவே, தன் கன்னிப் போர்க்களமாகத் தென்கலிங்க நாட்டைத் தேர்ந்து கொண்டான்.

விண்ணைத் தொடும் கொடியும், வெண் கொற்றக் குடையும் கட்டிய நெடிய பெரிய தேர்களைக் கொண்ட மௌரியப் பெரும்படை தென்கலிங்கம் புகுந்து பாடி கொண்டது. கலிங்கம் வந்து கண்ட கங்கைக் கரையான், தான் எதிர் பார்த்ததுபோல் கலிங்கம் படை பலத்தால் குறைந்திருக்கவில்லை என்பதைக் கண்டான். அறுபதினாயிரம் வாள் வீரர்களையும், ஆயிரம் குதிரை வீரர்களையும், எழுநூறு போர் யானைகளையும் கொண்ட பெரும்படை, அசோகன் வரவை எதிர் நோக்கி ஆங்கு காத்து நின்றது. அது அசோகன் சினக் கனலைச் சிறக்க மூட்டி விட்டது. ஒரு பேரரசின் காவலனாகிய தான் தன் பெரும் படையோடு வந்திருப்பதை அறிந்தவுடனே ஓடி வந்து அடிபணிய வேண்டிய ஒரு சிறிய நாடு, தன்னோடு பகைத்துப் படை கொண்டு நிற்பதா என்று எண்ணிச் சினந்தான். அவ்வளவே அவன் பெரும் படை தென்கலிங்கப் படை மீது பாய்ந்து விட்டது. அறம் அருள் என எண்ணிப் பாராமல் கலிங்க நாட்டின் காவற் சோலைகளைக் கவினிழக்கப்