பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126


பண்ணிற்று. விளைபயிர்களுக்கு எரியூட்டிற்று. உண்ணு நீர்க் குளங்களையும், தண்ணீர் நிறைந்து வழியும் ஏரிகளையும் இடித்துப் பயனிலவாக்கிற்று; மாடங்கள் மண் மேடாயின, பொதுவில்லங்கள் மக்கள் வழங்கலாகாப் பாழிடங்களாயின, மகதப் படை இவ்வளவு அழிவு செய்தும் கலிங்கப் படை கலங்காது போரிட்டது. ஒரு நூறாயிரம் வீரர் உயிர் இழந்தனர். அவர் மேலும் ஒன்றரை மடங்கு வீரர் சிறை பிடிக்கப்பட்டனர். இவ்வளவு பேரழிவிற்குப் பிறகும், சின்னஞ்சிறு கலிங்கம் மகதப் பேரரசை எதிர்த்து நிற்றல் இயலுமோ? இறுதியில் கலிங்கம் பணிந்து விட்டது, வெள்ளையாடையின் இடையே கரும் புள்ளி போல், பரந்த மகதப் பேரரசின் நடுவே தனியரசு செலுத்திய கலிங்கத்தின் ஆட்சி அழிந்து விட்டது. அசோகன் கனவு நனவாகி விட்டது. - கலிங்கம் பணிந்து விட்டது. அசோகன் மேற்கொண்ட முதற்போர் அது. அதில் அவன் பெருவெற்றி பெற்று விட்டான். ஆனால், அதுவே, அசோகன் வாழ்வில் கண்ட கடைசிப் போராகவும் முடிந்தது. கலிங்கத்தில் வெற்றி கண்ட மகதக் காவலன், களக் காட்சியைக் கண்டான், அவ்வளவே, அவன் அகக்கண் திறந்து கொண்டது. களத்தில் மாண்டு கிடக்கும் மறவர்களின் தொகையை மதிப்பிட்டுப் பார்த்தான், வீழ்ந்து கிடக்கும் வேழங்கள் எத்தனை ஆயிரம்? காற்றெனப் பாய்ந்தோடும் குதிரைகளில் கொலையுண்டு போயின எத்தனை ஆயிரம்? உருக்குலைந்து கிடக்கும் தேர்கள் எத்தனை? இப்பேரழிவுக்குக் காரணம் தான் ஒருவனே அல்லவோ? தன்னொருவன் ஆசையை நிறைவேற்றவோ இத்தனை உயிர்களின் அழிவு? இதுவும் ஒரு வெற்றியா? என்னே என் அறியாமை! என்று எண்ணி எண்ணி இடர் உற்றது அவன் உள்ளம். அந்நிலையில், மகதப் படைகள் கலிங்க நாட்டில் விளைத்த கேட்டின் பயனாய்க் கலிங்க நாடு வளம் இழந்து போய் விட்டது, மக்கள் வறுமைக்குள்ளாயினர். பசியால் வாடிய அவர்கள்