பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

சென்று, கீழ்க்கடற்கரைக் கண்ணதாகிய காவிரி நாட்டைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும், இளையோனாகிய பாண்டியன் வழி வந்தவர் மட்டும், தாங்கள் தொன்று தொட்டு வாழ்ந்துவந்த வாழிடமாகிய பொருநை ஆற்றங்கரையிலேயே தங்கிவிட்டனர் என்றும் வரலாற்றாசிரியர் சிலர் கூறுகின்றனர்.

இவ்வாறு பலரும் பாராட்டப் பாராண்ட பேரரசர் மூவருள் நடுவண் நிறுத்திப் பாராட்டப்பெறும் பேற்றினைப் பெற்றவர் சோழர். சோழர்குல முதல்வர், ஆட்சி முறையின் அரிய உண்மைகளை உள்ளவாறு உணர்ந்த உயர்ந்தோராவர். மக்களின் தேவைகளுள் நனி மிகச் சிறந்தது உணவு. உடையிலும், உறையுளிலும் குறை நேரினும் அவர்கள் தாங்கிக்கொள்வர். ஆனால் உணவில் குறை நேரின் அதை அவர்களால் தாங்கிக்கொள்வது இயலாது. அந்நிலை உண்டாயின் அவர்கள் அமைதி இழந்து போவர். ஆத்திரம் அவர்கள் அறிவை அழித்துவிடும்; சிந்திக்கும் ஆற்றலை இழந்து நிற்கும் அந்நிலையில் அவர்கள் எதையும் செய்யத் துணிந்து விடுவர். அழிவுத் தொழில் ஒன்றைத் தவிர்த்து, வேறு எதையும் அறியாதவராகி விடுவர். அரசியலின் இப்பேருண்மையைச் சோழர் குலப்போரசர்கள் அறிந்திருந்தனராதலின் அவர்கள் தம் நாட்டு உணவுப் பெருக்கத்தைத் தலையாய கடமையாகக் கருதினார்கள். உணவுப் பெருக்கம் உண்டாக வேண்டு மேல், அதற்குக் குறையா நீர்வளம் என்றும் தேவை என்பதை நெஞ்சில் நிலை நிறுத்தினார்கள் . அதனால் பெரியவும் சிறியவுமாய நீர் நிலைகள் எண்ணற்றனவற்றை நாடெங்கும் அமைத்தனர். ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டிப், பயன் இன்றி ஓடிக் கடலில் விழும் தண்ணீரை வாய்க் கால்கள் வழியே கொண்டு சென்று அந்நீர் நிலைகளை நிரப்பினர். நீர் வளம் பெருகவே நிலம் நிறைய விளைந்தது. ‘வேலி ஆயிரம் விளைக’ என வாழ்த்தினார்கள் ஆன்றோர்கள். வயல்களும் அவ்வாறே விளைந்தன. “ஒரு களிறு படியும்