பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142


செதுக்கிய கல்வெட்டுக்கள் வழியாகவும், தன் நாட்டில் வாழும் பக்களுக்கும் இனி வாழப் போகும் மக்களுக்கும் உணர்த்திய அசோகன், யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற உயர்ந்த உள்ளம் கொண்டு உலக மக்கள் அனைவருக்கும் உணர்த்த விரும்பினான்.

அரசன் இறந்தால், அவன் மக்களுள் மூத்தோன் அரியணை ஏற, இளையோர் பிற அரசியல் பணியேற்று வாழ்வர்; அம்முறையாலும், அவரிடையே மனவேறுபாடு தோன்றி பகை வளருமாதலின், அசோகன், அவ்விளையோர்களைத் துறவிகளாக்கி அருளற நெறி வளர்க்கும் அடியார்களாக்கி விட்டான். அவ்வடிகளாரைத் தன் சமய வளர்ச்சிக்குத் துணையாகக் கொள்ளக் கருதினான். அவர்களையும், வேறு பிற புத்தத் துறவிகளையும் கொண்ட புத்த மத வளர்ச்சிக் கழகம் ஒன்றை நிறுவினான். அவற்றின் வழியாக, அவர்களை வெளி நாடுகளுக்கு அனுப்பி புத்த மதத்தைப் பரப்பினான். இமயமலை நாடுகளாகிய திபேத், காம்போஜம், காபூல் பள்ளத்தாக்கு நாடுகளாகிய காந்தாரம், யவனம், விந்திய மலை நாடுகளாகிய போஜம், புலிந்தம், கிருஷ்ணையும், கோதாவரியும் பாயும் ஆந்திரம், முதலாம் தன் ஆட்சிக்குட்பட்ட நாடுகளுக்கும், தன் ஆணைக்கு அடங்காராயினும், தன் பால் அன்பும் நட்பும் உடையார் ஆளும், சேர,சோழ, பாண்டிய சத்திய புத்திரர் நாடுகளுக்கும், கடல் கடந்த ஈழ நாட்டிற்கும், சிரியா, எகிப்து, மாசிடோனியா, முதலாம் மேலை நாடுகளுக்கும் அடிகளாரை அனுப்பி அருளற நெறியை அங்கெல்லாம் பரப்பினான், இலங்கைக்குச் சென்ற அடிகளார் திருக்குழுவிற்குத் தன் இளவல் மகேந்திரனையே தலைவனாக்கி அனுப்பினான். ஈழ நாட்டின் வரலாறு உரைக்கும் மகாவம்சம், சங்கமித்திரை என்ற பெயர் பூண்ட அவன் தங்கையும் உடன் சென்றதாகக் கூறுகிறது. அதே வரலாற்று நூல், பர்மா நாட்டில் உள்ள, சுவர்ண பூமி என வழங்கும் பெருநாட்டிற்கும்