பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

சீறிடம் எழு களிறு புரக்கும் நாடு கிழவோய்” என அந்நாடாள் அரசனை அவன் நாட்டு வளம் காட்டிப் பாராட்டினார்கள் புலவர்கள். “நெல்லுடையான் நீர்தாடர்கோ” எனச் சோழரும், “மேதக்க சோழவள நாடு சோறுடைத்து”, “தஞ்சை, தென்னாட்டின் தெற் களஞ்சியம்” எனச் சோழநாடும் பாராட்டப் பெற்றன. மூவேந்தர்களுள், சோழர்கள் மட்டுமே, இவ்வாறு வளத்தில் சிறந்து விளங்கினமையால், அவர்களுக்கு “வளவர்” எனப் பெயர் சூட்டிப் பாராட்டிற்று அன்றைய உலகம்.

சோழர் பேரரசின் இப்பாராட்டுதலுக்குப் பெரிதும் காரணமாய் விளங்கியவன் கரிகாற்பெருவளத்தான். இமயம் முதல் ஈழம்வரை சென்று பரவியது போதாது, என் வெற்றிப் புகழ் இமயத்துக்கு அப்பால் உள்ள நாடுகளிலும் சென்று பரவவேண்டும் என்றும், பருவ மழை பொய்யாது பெய்தலால் உளவாகும் வளம் மட்டும் போதாது, காவிரியாற்று நீர் என் ஆணைக்கு அடங்கி, நான் அமைக்கும் அணையில் தேங்கியிருந்து பாய்வதால் பெறலாகும் பெருவளமும் உண்டாதல் வேண்டும் என்றும், உள்நாட்டு வாணிகத்தின் வளர்ச்சி மட்டும் போதாது, நான் அமைக்குப் புகார்த்துறையில் பல்வேறு நாட்டுக் கலங்களும் வந்து காத்துக் கிடக்குமளவு கடல் வாணிகத்தின் வளர்ச்சியும் வேண்டும் என்றும் விரும்பி, விரும்பிய அனைத்தையும் விரும்பியவாறே பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்தான் திருமாவளவன். ஆனால் அந்தோ! அவன் கண்ட அப்பேரரசு அவனுக்குப் பின் வீழ்ந்து விட்டது. அவனுக்குப் பின் அரியணை ஏறிய சோழர் குலத்தவர் ஆட்சியைக் கைப்பற்ற நிகழ்த்திய உள்தாட்டுப் போர்களால், சோழர் பேரரசு சிறிது சிறிதாக உரம் இழந்து கொண்டிருந்தது. இருநூறு ஆண்டுகளுக்குள் இருபதுக்கும் மேற்பட்டோர் அரியணை ஏறி இறங்கிவிட்டனர். இந்நிலையில் களப்பிரர் என்ற வடநாட்டுக் கொள்ளைக் கூட்டத்தவர் வேறு, தமிழகத்தில் நுழைந்து