பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24



செலுத்தினான். வலி குன்றியிருக்கும் தன் படையால், வல்லரசாய் வாழும் அவ்வட நாட்டரசை வென்று தன் நாட்டை அகப்படுத்துவது எளிதில் ஆகாது என அறிந்து, அவனோடு போர் தொடுப்பதன் முன், அவன் படை வலியைக் குறைத்துத் தன் படை வலியைப் பெருக்க வழி கண்டான். தொண்டை மண்டலத்தை வென்ற இராஷ்டிரகூட மன்னன், அதன் ஆட்சிப் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள்ளாமல் அதைத் தக்கோலப் போரில் தன் பக்கம் நின்று போரிட்ட வைதும்பர்பால் ஒப்படைத் திருந்தான். ஆகவே, தான் போர் தொடுக்க வேண்டு மாயின் அவ் வைதும்பர் மீதே போர் தொடுத்தல் வேண்டும் என்பதை அறிந்த அரிஞ்சயன், முதலில் அத் தக்கோலப் போரில் இராஷ்டிரகூடர் பக்கம் நின்று போரிட்ட மற்றோர் அரச இனத்தவராய வாணர் குல இளவரசன் ஒருவனுக்குத் தன் மகள் ஒருத்தியை மணம் முடித்து, அவர் படைத் துணை, பகைவர்க்குக் கிடைக் காமல், தனக்கே கிடைக்கும் படிச் செய்தான்; இவ்வாறு படை வலியைப் பெருக்கிக் கொண்ட பின்னர், ஒருநாள் தொண்டைநாடு நோக்கிப் படை கொண்டு சென்றான். ஆனால் போரின் முடிவு தெரிவதற்கு முன்பே உயிர் துறந்து போனான். வடார்க்காடு மாவட்டம் திருவலத்திற்கு வடக்கே ஆறுகல் தொலைவில் உள்ள மேற்பாடி என்ற ஊரில் அரிஞ்சயன் இறக்க அவன் இறந்த அவ்விடத்தில், அவன் நினைவாய்க் கோயில் அமைத்து வழிபட்டான். அவன் பெயரன் இராச இராசன்.

இரண்டாம் பராந்தகன் : வடபுறத்துப் பகையைக் குறைத்துக் கொள்ளும் கருத்தோடு வாணர் குலத்தான் ஒருவனுக்குத் தன் மகளைத் தந்தது போலவே, வைதும்பர் குலத்தில் வந்தாள் ஒருத்தியைத் தான் மணம் செய்து கொண்டான் அரிஞ்சயன். அவள் வயிற்றில் பிறந்த மகனே, சுந்தர சோழன் என வழங்கப்பெறும் இவ் விரண்டாம் பராந்தகன். திருமுனைப்பாடி நாட்டையும்,