பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
33

அப்போது ஆட்சியிலிருந்த அரசன், விமலாதித்தனுக்கு அடிக்கடி இடையூறு இழைக்கத் தொடங்கினான். அவன் தொல்லை பொறுக்கமாட்டாத விமலாதித்தன் தன் மாமன்பால் முறையிட்டான். ம்ருகன் குறை தீர்க்கத் துணிந்த இராசராசன், கலிங்கத்தின் மீதுபோர் தொடுத்து அந்நாட்டுக் காவலனை வென்று, அங்குள்ள ஒருமலை முகட்டில் வெற்றித்தூண் ஒன்றைக் நாட்டினான். சோணாட்டுக் காவலன் கலிங்க நாட்டில் பெற்ற இவ்வெற்றிக்கு, அந்நாட்டு மகேந்திரகிரி மலையில், தமிழிலும் வடமொழியிலும் வரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்களே சான்று பகிர்கின்றன.

இராசராசன் இறுதியாகப் பெற்ற வெற்றி முந்நீர்ப் பழந்தீவு பன்னிராயிரத்தில் பெற்ற வெற்றியேயாகும். சேரநாட்டுக் கடற்கரைக்கு அணித்தாகக் கடலிடையே உள்ள எண்ணிலாச் சிறு தீவுகளில் வாழ்ந்திருந்த கடற்கொள்ளைக் கூட்டத்தார், நினைத்தபோதெல்லாம் சேர நாடு புகுந்து கேடு செய்கின்றனர் என்பதைக் கேள்வியுற்ற இராசராசன் தன் கடற்படையின் துணையால், அத்தீவுகளைக் கைப்பற்றி, அங்குத் தன் படையின் ஒரு பகுதியை நிறுத்தி அத்தீவினரால் தீங்கொன்றும் நிகழாவண்ணம் காவல் மேற்கொண்டான். .

பகையரசர் பலரை வென்று ஒரு பேரரசை நிலை நாட்டிய பெரு வீரனாகிய இராசராசன் சிறந்த அரசியல் அறிவும் உடையவனாய் விளங்கினான்; அப்பேரரசில் ஒரு சிறு குழப்பமும் உண்டாகாவண்ணம் நல்லரசு நடத்தினான்; தன் ஆட்சி அமைதி நிலவும் நல்லாட்சியாக விளங்க அவன் ஆற்றிய அரசியல் பணிகள் பலவாம். பேராற்றலும் பெருவீரமும் படைத்த தன் மகன் இராசேந்திரனுக்கு அவன் இளமைப் பருவத்திலேயே இளவரசுப் பட்டம் கட்டி, அரசியல் அலுவல்களில் கலந்து கொண்டு பல துறையிலும் பயிற்சி பெறப் பண்ணினான். அக்காலை அவன் பெற்ற பயிற்சியே, பிற்காலத்தில் ஒரு

க--3