பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36



கிருஷ்ணை துங்கபத்திரை ஆகிய இரு பேராறு களுக்கும் இடையில் அமைந்திருப்பதும், இன்று பம்பாய் மாநிலத்தின் ஒரு பகுதியாய் ரெய்ச்சூர் மாவட்டம் எனப் பெயர் பெறுவதுமாகிய நாடு பண்டு இடைதுறை நாடு என அழைக்கப்பெற்றது; அந்நாடே, இராசேந்திரன் வென்றடக்கிய முதல் நாடாக அவன் மெய்க்கீர்த்தி கூறுகிறது.

மைசூர் தனியரசின் வடமேற்குப் பகுதியைத் தன்ன கத்தே கொண்டு, கங்கபாடிக்கு வடக்கிலும், நுளம்ப பாடிக்கு மேற்கிலும் இருந்த வனவாசிப் பன்னீராயிரம் என்ற சிறு நாட்டையும் இராசராசன் வெற்றி கண்டான்.

ஐதராபாத்திற்கு வடக்கிழக்கில் நாற்பத்தைந்து கல் தொலைவிலுள்ள குல்பாக் என்ற ஊர், பண்டைக் காலத்தில் கொள்ளிப்பாக்கை எனும் பெயருடையதாய், அகழியும் மதிலும்சூழ்ந்த அரண்களைத் தன்னகத்தே கொண்டதாய், ஒரு சிறு நாட்டின் தலைநகராய்த் திகழ்ந்தது; இராசேந்திரன் வெற்றிக்கொடி அந்நகரிலும் நின்று பறந்தது!

ஒரு காலத்தில் இராஷ்டிரகூடர்களின் தலைநகராய் இருந்ததும், வழியிடை நகராய் அமைந்து வடநாட்டு வேந்தர்களின் தாக்குதல்களையும், தென்னாட்டுக் காவலரின் தாக்குதல்களையும் ஒருங்கே பெற்று உரு விழந்து போனதும் ஆய, மானியகேடம் என வழங்கும் மண்ணைக் கடக்கத்தின் மண்ணும் இராசேந்திரனின் வெற்றிப்புகழ் பாடிற்று. மேலைச் சாளுக்கியரின் ஆட்சிக்குட்பட்ட இந்நாடுகளில் பெற்ற வெற்றிகள் அனைத்தும் இராசேந்திரன் அரியணை ஏறுவதற்கு முன்னர்ப் பெற்ற வெற்றிகளாம்.

இராசராசன் ஆட்சிக் காலத்தில் அவன் தண்டத்தலைவனாய்ச் சென்று போரிட்ட தனக்குத் தோற்று, ஒடி ஒளிந்து கொண்ட ஈழநாட்டரசன், சில ஆண்டுகள்