பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
38



தான். உடனே தன் மக்களுள் ஒருவனைப் பாண்டித் தலைநகர்க்கு அழைத்துச் சென்று, ஆங்கு அவனுக்குச் சோழ பாண்டியன் எனும் பட்டப்பெயர் சூட்டிச் சேர பாண்டிய நாடுகளின் ஆட்சிப் பொறுப்பை அவன்பால் ஒப்படைத்து அவனை ஆங்கிருந்து ஆட்சிபுரியுமாறு பணித்தான். சேர நாட்டின் தென்கோடியில் உள்ள கோட்டாற்றில், தன்கீழ்ப்பணிபுரியும் சாளுக்கிய இளவரசன் ஒருவன் தலைமையின் கீழ் பெரிய நிலைப்படை ஒன்றை நிறுத்தி வைத்தான். இவ்வாறு செய்து முடித்த முன்னேற் பாடுகளால், தான் இல்லாக் காலத்தும் நாட்டில் அமைதி நிலவும் நல்லாட்சியே நடை பெறும் என்ற துணிவு வரப் பெற்றான்.

நிலைகுலையா நல்லாட்சிக்குச் செய்யவேண்டுவ அனைத்தையும் செவ்வனே செய்து முடித்த அந்நிலையில் வடவெல்லையில் மேலைச் சாளுக்கியர் விளைத்த சிறு பூசல், இராசேந்திரனின் வெளிநாட்டுப் படையெடுப்பைச் சிறிது காலம் கடத்தப் பண்ணிற்று. மேலைச் சாளுக்கிய மரபில் வந்து அப்போது ஆட்சி புரிந்து கொண்டிருந்த மன்னன், சோழரிடம் தன் முன்னோர் இழந்த நாடுகளைக் கைப்பற்றும் கருத்தினைக் கொண்டான். இராசேந்திரன் சிந்தையும் செயலும் வேறு ஒரு திக்கில் சென்றிருந்த சமயம் நோக்கித், துங்கபத்திரை வடகரைக் கண்ணவாய்ச் சோழர் ஆட்சிக்குட்பட்டிருந்த சிற்சில பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டான். அஃதறிந்தான் இராசேந்திரன்; உடனே தொண்டை நாட்டுத் தலைநகராம் காஞ்சியில் நிறுத்தி வைக்கப்பெற்றிருந்த வடவெல்லைப் படையோடு சாளுக்கியநாடு நோக்கிச்சென்றான். முயங்கி எனும் இடத்தில் சாளுக்கியரை மடக்கிப் போரிட்டு வென்றான்; அந் நாட்டு மன்னன் அஞ்சிப் புறமுதுகிட்டு அரண் புகுந்து ஒளிந்து கொண்டான். பொன்னையும் நவமணிகளையும் பெருந்திரளாக வாரிக்கொண்டு, இராசேந்திரன் சோணாடு வந்து வெற்றித் திருவிழாக் கொண்டாடினான்.